

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வறிக்கையை இரண்டு மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், பள்ளிக் கல்வித் துறை செயலர் நேரில் ஆஜராக நேரிடும் என்று அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வி.கார்த்திகேயன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
2014-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வடசென்னை மணலி சடையங்குப்பத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவர்கள் ஆகாஷ், சூர்யகலா ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும். மாநகராட்சிப் பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று 2012-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையை அமல்படுத்த வேண்டும். இதைக் கண்காணிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களின் பிரதிநிதிகள் கொண்ட நிலைக்குழுவை அமைக்க கல்வித் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியைக் கொண்ட முதல் அமர்வு இந்த மனுவை விசாரித்து, சென்னை பாரிமுனையில் உள்ள பச்சையப்பன் அரசு பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.ஜெயச்சந்திரன், பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளி முன்னாள் உதவி தலைமை ஆசிரியர் ஆர்.நவமணி ஆபிரகாம் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழுவொன்றை நியமித்தது. அத்துடன், பொதுப்பணித் துறையில் இருந்து ஒரு சிவில் இன்ஜினீயரை அத்துறையின் தலைமைப் பொறியாளராக நியமிக்க வேண்டும் என்றும், இக்குழு, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் டி.ராஜேந்திரன் தலைமையில் செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இக்குழு பள்ளிகளில் மூன்று மாதத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்தியதற்கான அறிக்கையை 2014-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதிக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
நீதிமன்ற உத்தரவுப்படி ஏற்கெனவே சில பள்ளிக ளில் மட்டும் ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. எஞ்சிய பள்ளிகளில் எந்த ஆய்வும் மேற்கொள்ளப் படவில்லை. எனவே மீதமுள்ள பள்ளிகளில் விரைவில் ஆய்வை முடித்து அதன் அறிக்கையை 2 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு குழு தலைவரான பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் ராஜேந்திரன் கடந்த மார்ச் மாதம் ஓய்வுபெற்றுவிட்டார் என்று காரணம் கூறுவதை ஏற்க முடியாது.
குழுவின் தலைவர் பெயரைக் குறிப்பிட்டே நீதிமன்றம் உத்தர விட்டது. அப்படி இருக்கும்போது அவர் ஓய்வுபெற்றாலும் அவர்தான் குழுவின் தலைவர். மாநகராட்சிப் பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து இரண்டு மாதத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை செயலருக்காக ஆஜரான அரசு வழக்கறிஞர் தற்போது உறுதி அளித்துள்ளார். அதன்படி, அடுத்த விசாரணைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால், பள்ளிக் கல்வித்துறை செயலர் நேரில் ஆஜராக நேரிடும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இவ்வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.