

தமிழகத்தில் மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ கூறினார்.
மக்கள் நலக் கூட்டணி சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே மாற்று அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, ‘திராவிட இயக்கத்தின் தனித்துவம் அதிமுக - திமுகவால் சீரழிந்து விட்டது. மணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை, கிரானைட் ஊழல், சொத்து குவிப்பு, 2ஜி ஸ்பெக்ட்ரம் போன்ற ஊழல் வழக்குகளில் 2 பெரிய கட்சிகள் சிக்கியுள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை நிச்சயம் கிடைக்கும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் 25 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட அனைவரும் மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விடுதலை செய்யப்படுவார்கள்’ என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் பேசும்போது, ‘தன்னை தனி ஆள் என கூறும் ஜெயலலிதா கோடிக்கணக் கான சொத்துக்களை ஏன் குவித்து வைத்துள்ளார். கருணாநிதியும், குடும்ப அரசியல் நடத்தி வருகிறார். தமிழகத்தில் விவசாயம் முழுமையாக அழிந்துவிட்டது. ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிமுகவும், திமுகவும் மவுனம் சாதித்தன. மக்கள் நலக்கூட்டணி ஆட்சி வெற்றி பெற்றால், திராவிடக் கட்சிகளின் ஊழல் குறித்து விசாரணை நடத்துவோம்’’ என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசும்போது, ‘பெரிய மலையை சிறிய உளியைக் கொண்டு உடைப்பது போல், அதிமுக - திமுக என்ற 2 பெரிய மலைகளை மக்கள் நலக்கூட்டணி என்ற சிறிய உளியை கொண்டு உடைக்கப் போகிறோம்’ என்றார்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசும் போது, ‘கடந்த 1967-ம் ஆண்டு காங்கிரஸ் என்ற பந்தயக் குதிரையை, பேரறிஞர் அண்ணா தலைமையிலான சிறிய கட்சிகள் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றின. அதேபோல், அதிமுக - திமுக போன்ற பெரிய கட்சிகளை மக்கள் நலக்கூட்டணி தோற்கடிக்கும்’ என்றார்.