

தாது மணல் கொள்ளையை தடுக்கும் வகையில், நெல்லை மாவட்டம் கனிம குவாரிகளில் இன்று இரண்டாம் கட்ட ஆய்வு தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் 17,18,19 ஆகிய 3 நாட்கள் கனிம குவாரிகளில் சிறப்பு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில், இன்று தொடங்கியுள்ள 2-ஆம் கட்ட ஆய்வு, நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள 52 குவாரிகளில் இன்றும் நாளையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்ட கடற்கரைகளில் சட்ட விரோதமாக தாது மணல் அள்ளப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து தாதுமணல் முறைகேடு பற்றி ஆய்வு நடத்த வருவாய்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான சிறப்பு குழுவை தமிழக அரசு அமைத்தது.
அந்த குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் 2 கட்டங்களாக ஆய்வு நடத்தி, ஆய்வறிக்கையை முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிடம் சமர்ப்பித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட கடற்கரைகளில் ஆய்வு நடத்தப்பட்டதை தொடர்ந்து நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைகளில் செயல்படும் தாதுமணல் குவாரிகளிலும் ஆய்வு நடத்த அரசு உத்தர விட்டது.