

பெண் கட்டிடத் தொழிலாளியிடம் தவறாக நடக்க முயன்று, அவரை கழுத்தை நெரித்து கொன்ற மேஸ்திரி கைது செய்யப்பட்டார்.
சென்னை நுங்கம்பாக்கம் கங்காதர முதலி தெருவில் புதிதாக ஓர் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த சீனிவாசன்(30), சாரதா(28) ஆகியோர் இங்கு கட்டிடத் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். இவர்களுக்கு பிரதீப்(5), கிரி(3) என 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் கட்டிடத்தின் அருகிலேயே ஒரு குடிசையில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்கின்றனர். அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியை சேர்ந்த பாண்டியன்(34) இங்கு மேஸ்திரியாக உள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவில் சீனிவாசன் மது அருந்திவிட்டு உறங்கிவிட்டார். 11 மணியளவில் மேஸ்திரி பாண்டியன் திடீரென சீனிவாசனின் குடிசைக்கு வந்து, சாரதாவை வெளியே அழைத்தார். வெளியே வந்த சாரதாவிடம் அவர் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது நடந்த போராட்டத்தின் போது சாரதா அபய குரல் எழுப்ப, அவரது கழுத்தை பாண்டியன் நெரித்ததாக தெரிகிறது. சாரதாவின் குரலைக் கேட்டு சீனிவாசனும் அருகே உள்ள ஒரு நிறுவனத்தின் காவலாளியும் ஓடிவர சாரதாவை கீழே தள்ளிவிட்டு கட்டிடத்திற்குள் இருட்டில் பாண்டியன் ஒளிந்து கொண்டார்.
சாரதா மயங்கிக் கிடக்க அவரை எழுப்பும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டபோது பாண்டியன் தப்பி ஓட, அவரை காவலாளி விரட்டினார். அந்த நேரத்தில் ரோந்து காவலர்கள் வர அவர்களிடம் பாண்டியன் சிக்கினார். காவலர்கள் விரைந்து வந்து சாரதாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.