Published : 14 Nov 2014 10:20 AM
Last Updated : 14 Nov 2014 10:20 AM

காங்கிரஸிலிருந்து தாவினார் குமாரதாஸ்: குமரி மாவட்ட கட்சியினர் குழப்பம்

கிள்ளியூர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் நீடிப்பதாக கூறியவர் தற்போது, ஜி.கே.வாசனுக்கு ஆதரவு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் வசம் உள்ளன. மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி வலுவாக இருந்தாலும் கோஷ்டி பூசல்களுக்கும் பஞ்சம் இல்லை.

இதனாலேயே கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை தலைவர் நியமனம் செய்யப்படவில்லை. சமீபத்தில் இங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வந்தபோது, பிரிந்து கிடந்த கோஷ்டிகள் ஒருங்கிணைந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அந்த பெருமித மகிழ்ச்சியோடு பேசி விட்டுச் சென்றார் அவர்.

ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்குவது குறித்து அறிவித்தபோது, கிள்ளியூர் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் அவரது முகாமுக்கு சென்று விட்டார். ஆனால், குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஜி.கே.வாசனுக்கு ஆதரவு அளிக்கவில்லை.

அதேவேளை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மூப்பனார் தொடங்கியபோது, அதில் இணைந்து செயல்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் என்ன முடிவு எடுப்பார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது அவர் அளித்த பேட்டியில், “நான் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில்தான் செயல்பட உள்ளேன். கன்னியாகுமரி மாவட்டம் எப்போதுமே காங்கிரஸ் கட்சியின் கோட்டைதான். இப்போது செல்பவர்களால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. கோபத்தால் வாசன் தனி கட்சி தொடங்குகிறார். விரைவில் தாய் கட்சியில் இணைந்து விடுவார்” என்றார்.

பல கட்சிக்கு மாறியவர்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆனதும் அவரை சந்தித்து வாழ்த்தும் தெரிவித்தார். தற்போது குமாரதாஸ், ஜி.கே.வாசன் அணிக்கு சென்று விட்டார். இவர் தமாகா, ஜனதா தளம் சார்பில் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஜனதாதளம், காங்கிரஸ், தமாகா, தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ், அதிமுக, நாடார்களை ஒருங்கிணைத்து ஒரு கட்சி, அதன் பின்னர் மீண்டும் காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளில் இருந்த குமாரதாஸ், தற்போது ஜி.கே.வாசனுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

இது குறித்து அவரிடம் கேட்பவர் களிடம், “ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை சந்தித்தது நட்பு ரீதியானது. தமாகா சார்பில் கிள்ளியூர் தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள் ளேன். அது கலைக்கப்படும்போதே தடுத்தேன். காமராஜர் ஆட்சி அமைக்க ஜி.கே.வாசனால்தான் முடியும்” என்று கூறி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x