Published : 18 Feb 2014 12:00 AM
Last Updated : 18 Feb 2014 12:00 AM

தேமுதிக பூனையா, புலியா?- பேரவையில் காரசார விவாதம்

சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி பேசும்போது, ``இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் தன் பேச்சில், பிரதமர் மன்மோகன்சிங்கை, பெயர் சொல்லி ஒருமையில் பேசினார். நாங்கள் இங்கு பேசும்போது, மாண்புமிகு என்று மரியாதையுடன்தான் உங்களை (பேரவைத் தலைவர்) அழைக்கிறோம். நாட்டின் பிரதமரை அவையின் மூத்த உறுப்பினர் அவ்வாறு சொல்வது சரியல்ல” என்று கூறினார். அப்போது அவையில் குணசேகரன் இல்லை.

பாலபாரதி (மார்க்சிஸ்ட்): தனிப்பட்ட நபரைத் தாக்கிப் பேசிய வரலாறு கம்யூனிஸ்ட்களிடம் எப்போதும் இருந்ததில்லை.

விஜயதாரணி: முதல்வரை மாண்புமிகு முதல்வர் என்று அழைப்பதுபோல், பிரதமரையும் சொல்லியிருக்க வேண்டும்.

பேரவைத் தலைவர் தனபால்: அவர் பேசிய வார்த்தையை பிரதமர் என்று மாற்றி, பதிவு செய்து கொள்ளலாம்.

(அப்போது, விஜயதாரணி தனது தரப்பு வாதத்தை வைத்து ஆவேசமாக பேசினார். உடனே, அவரைப் பாராட்டும் விதமாக தேமுதிக உறுப்பினர்கள் மேசையைத் தட்டினர்.)

அமைச்சர் கே.பி.முனுசாமி: தங்களை அறியாமலேயே காங்கிரஸ் உறுப்பினர் பேசுகையில் தேமுதிக உறுப்பினர்கள் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தனர். இது உங்களுடன் வர இருக்கிறோம் என்று கூறுவதுபோல் உள்ளது.

அமைச்சர் பன்னீர்செல்வம்: பூனைக்குட்டி இப்போது வெளியே வந்துவிட்டது (ஆங்கிலத்தில் குட்டு வெளிப்பட்டுவிட்டது என்பதற்கு சொல்லப்படும், “கேட் இஸ் அவுட் ஆப் தி பேக்” - மேற்கோள்). இதனால் அவையில் பெருத்த சிரிப்பலை எழுந்தது.

அழகாபுரம் மோகன் ராஜ் (தேமுதிக): பூனை அல்ல, புலிதான் வந்துள்ளது.

அமைச்சர் வைத்திலிங்கம்: பூனையா? புலியா? என்பது போகப் போகத் தெரியும்.

அமைச்சர் கே.பி.முனுசாமி: புலியா, பூனையா என்பதை விடுங்கள். பூனையோடுகூட ஒப்பிட முடியாது.

பாலபாரதி: மூழ்கும் கப்பலுக்கு, யாராவது கேப்டனாக ஆக முடியுமா?

அமைச்சர் நத்தம் விசுவநாதன்: பிரதமரைப் பார்த்துவிட்டு, குடியரசுத் தலைவரை பார்த்துவிட்டுவந்ததாக டெல்லியில் சொல்லியிருக்கிறார். அதைச் சுட்டிக்காட்டிய நிருபரை அடிப்பது போல் சைகை காட்டியிருக்கிறார். (அப்போது தேமுதிக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்).

மோகன்ராஜ்: நாங்கள் யாரோடு சேரப் போகிறோம் என்று பயப்படுகிறீர்கள்.

நத்தம் விசுவநாதன்: எலிக்குட்டியைப் பார்த்து எப்படி பயப்படுவார்கள். பயம் என்பது எங்களது அகராதியிலேயே கிடையாது.

இவ்வாறு சட்டப்பேரவையில் விவாதம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x