Last Updated : 29 Nov, 2014 10:59 AM

 

Published : 29 Nov 2014 10:59 AM
Last Updated : 29 Nov 2014 10:59 AM

இந்தியா-ஆஸி. முதல் டெஸ்ட் திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல்

பிலிப் ஹியூஸின் திடீர் மரணத்தால் ஆஸ்திரேலிய வீரர்கள் கடும் அதிர்ச்சியிலும், துக்கத்திலும் ஆழ்ந்துள்ளனர். இதனால் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதில் சந்தேகம் நிலவி வருகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை பிரிஸ்பேனில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி சுதர்லேன்ட் கூறியதாவது:

ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கமானவரான பிலிப் ஹியூஸின் எதிர்பாராத மரணத்தால் பெரும் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு கால அவகாசம் அளிப்பது மிக முக்கிய மானதாகும். ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் கிரிக்கெட் விளை யாடும் மனநிலையில் இருந்து வெகுதூரத்தில் இருப்பதாக நினைக் கிறேன். முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுமா என்பது குறித்து அறிய எல்லோரும் ஆவலாக இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்.

நாங்கள் அனைவரும் கிரிக்கெட்டை நேசிக்கிறோம். அதேநேரத்தில் கிரிக்கெட்டைவிட ஹியூஸையே எல்லோரும் அதிக மாக விரும்புகிறார்கள். வீரர்கள் அனைவரும் மனதளவில் தயாரா கும்போது இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டி தொடங்கும் என்றார்.

சிட்னியில் கூடிய வீரர்கள்

ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் உள்ள வீரர்கள் அறையில் வெற்றி வியூகங்களை வகுப்பதற்காக கூடிய வீரர்கள், இந்த முறை பிலிப் ஹியூஸை இழந்த துக்கத்தை பகிர்ந்து கொள்வதற்காக கூடினார்கள்.

கேப்டன் கிளார்க், பிராட் ஹேடின், ஜான்சன், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், ரியான் ஹாரிஸ், பீட்டர் சிடில், ஜேம்ஸ் பட்டின்சன், முன்னாள் வீரர்களான கிளன் மெக்ராத், ஸ்டூவர்ட் கிளார்க், சைமன் கேடிச், பில் ஜாக்ஸ், பயிற்சியாளர் லீமான் உள்ளிட்டோர் வீரர்கள் அறையில் கூடியிருந்தனர். ஹியூஸின் மரணத்துக்கு காரணமான பவுன்சரை வீசிய சீன் அபாட்டும் அங்கு வந்திருந்தார். அவர்கள் பிலிப் ஹியூஸை நினைத்து அழுது புலம்பினார்கள். அவருடைய மரணத்தைப் பற்றி பேசி வருத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு அணியின் மருத்துவர் பீட்டர் புரூக்னர் ஆறுதல் கூறினார். உளவியல் நிபுணர் மைக்கேல் லாய்ட் அனைத்து வீரர்களுக்கும் கவுன்சிலிங் கொடுத்தார்.

ஹியூஸுக்கு நினைவு அஞ்சலி

நியூ சவுத்வேல்ஸ் மாகாணத் தின் சார்பில் பிலிப் ஹியூ ஸுக்கு நினைவு அஞ்சலி கூட்டம் நடத்தப்படும் என அதன் முதல்வர் மைக் பேர்ட் தெரிவித்துள்ளார். சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த நினைவு அஞ்சலி கூட்டத்துக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

பாக்., நியூஸி. வீரர்கள் மவுன அஞ்சலி

பாகிஸ்தான்-நியூஸிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. ஹியூஸின் மரணத்தைத் தொடர்ந்து இந்தப் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து வீரர்கள் பிலிப் ஹியூஸுக்கு மவுன அஞ்சலி செலுத்தியதோடு, கறுப்பு பட்டை அணிந்து விளையாடினர். இதுதவிர அனைத்து வீரர்களும் தங்களின் பேட் மற்றும் தொப்பிகளை ஒன்றாக வைத்து ஹியூஸுக்கு மரியாதை செலுத்தினர்.

ஊடகங்கள் அஞ்சலி

ஹியூஸின் அகால மரணத்துக்கு ஆஸ்திரேலிய ஊடகங்களும் அஞ்சலி செலுத்தியுள்ளன. அவருக்கு மரியாதை செய்யும் விதத்தில் ‘சிட்னி மார்னிங் ஹெரால்டு’ நாளிதழ், அவரைப் பற்றி 12 பக்கங்களில் செய்தி வெளியிட்டுள்ளது. ‘சிட்னி டெய்லி டெலகிராப்’ நாளிதழ் ஹியூஸைப் பற்றி செய்திகளுக்காக 14 பக்கங் களை ஒதுக்கியுள்ளது.

கறுப்பு பட்டை அணிந்து பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள்

பிலிப் ஹியூஸின் மரணத்தைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான 2 நாள் பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்திய வீரர்கள் அடிலெய்டில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

உள்ளரங்கில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள், பிலிப் ஹியூஸுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தங்கள் கைகளில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

முதல் டெஸ்ட் நடக்க வேண்டும் முன்னாள் ஆஸி. கேப்டன்கள்

ஹியூஸ் மரண அதிர்ச்சியிலிருந்து வீரர்களும், ரசிகர்களும் மீள்வதற்கு இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி நடைபெற வேண்டும் என முன்னாள் கேப்டன் இயான் சேப்பல், மார்க் டெய்லர் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக டெய்லர் கூறுகையில், “ஹியூஸின் இழப்பிலிருந்து மீள்வது கடினமானதுதான். ஆனால் அந்தத் துயரத்திலிருந்து மீண்டு வருவதற்கு கிரிக்கெட் சிறந்த மருந்தாக இருக்கலாம்” என்றார்.

சேப்பல் கூறுகையில், “முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினால் அது வீரர்களுக்கு நன்மை பயப்பதாக அமையும். அவர்கள் வலைப் பயிற்சிக்கு செல்ல வேண்டும். அவர்கள் போட்டியில் களமிறங்கும்போது அவர்களுடைய கவனம் போட்டியின் மீது செல்லும். ஹியூஸை பற்றிய நினைவுகள் அகல ஆரம்பிக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x