Published : 31 Jul 2016 02:42 PM
Last Updated : 31 Jul 2016 02:42 PM
ரிலையன்ஸ் ஜியோ நிறுவன உதவியுடன் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த இரு நாள்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்ற போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து சரக்கு மற்றும் சேவைவரி சம்பந்தமான புதுச்சேரி மாநில அரசின் கருத்துக்களை எடுத்துரைத்தேன். குறிப்பாக புதுச்சேரி மாநிலத்தின் வரி எந்த விதத்திலும் பாதிக்க கூடாது. அப்படி பாதிப்பு ஏற்பட்டால் 5 ஆண்டு காலம் மட்டுமல்லாமல் இழப்பீட்டை சரி செய்யும் வரை முழு தொகையையும் மத்திய அரசு வழங்க வேண்டும். இப்போது உள்ள முறைபோல் ஒரு ஆண்டுக்கு ஒரு முறை வரி இழப்பை தரும் நிலையை மாற்றி 3 மாதத்துக்கு ஒரு முறை அதை மாநில அரசுக்கு கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை வைத்தேன்.
பெரிய மாநிலங்களில் ரூ. 25 லட்சம் வரை முதலீடு செய்து வியாபாரத்தில் புழக்கம் இருக்கும் தொகை வரை உள்ள நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டனர். வடகிழக்கு மாநிலங்கள் ரூ. 4 லட்சம் முதலீடு செய்து வியாபாரம் செய்பவர்கள் தங்களுக்கு வரிவிலக்கு வேண்டும் எனவும் கேட்டனர்.
ஆனால் புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை ரூ. 25 லட்சம் வரை வரிவிலக்கு என்றால் 12 சதவீதம் நமது வருவாய் போகிறது. எனவே, பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் என இரண்டாக பிரிந்து, வடகிழக்கு மாநிங்களைப் போல புதுச்சேரி மாநிலத்துக்கும் ரூ. 10 லட்சத்துக்கு உட்பட நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளித்து, அதற்கு மேல் உள்ளவைகளுக்கு வரி போட அதிகாரம் வழங்க வேண்டும் என கூறினேன்.
புதுச்சேரி மாநிலம் நிதிக்குழுவில் இல்லாத காரணத்தால் முறையாக மத்திய வரியில் இருந்து கிடைக்க வேண்டிய தொகை எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் எங்கள் மாநிலத்துக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதனை ஈடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரைக்கால் துறைமுகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசுக்கு சுங்கவரி மற்றும் கலால்வரியில் ரூ. 2,100 கோடி கிடைத்துள்ளது. ஆனால் அதில் இருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு ரூ. 63 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இதனால் புதுச்சேரி மாநிலத்துக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை சரி செய்ய புதுச்சேரி மாநிலத்தை நிதிக்குழுவில் சேர்க்க வேண்டும்.
வரி இழப்பை ஈடுகட்ட ஒவ்வொரு ஆண்டும் குறைந்த அளவு 10 சதவீதம் திட்டமில்லா செலவினங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.
ரிலையன்ஸ் மூலம் வைஃபை சேவை:
ரிலையன் ஜியோ நிறுவனம் தொலைதொடர்பு சேவையை புதுச்சேரி மாநிலத்தில் அறிமுகம் செய்ய உள்ளனர். அது தொடர்பாக என்னை சந்தித்தனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு கல்லுாரிகள், கடற்கரையில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தி தருவதாக தெரிவித்துள்ளனர்.
அதற்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். நேரு வீதி, காந்தி வீதிகளில் வியாபாரிகள், கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச வைஃபை வசதியை ஏற்படுத்த வேண்டும் என நான் கோரிக்கை வைத்தேன். அதனையும் செய்வதாக உறுதி கூறியுள்ளனர். இந்த வைஃபை சேவையால் புதுச்சேரிக்கு எந்தவித இழப்பும் இல்லை என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் நாராயணசாமி, ''நான் ராஜிவ் கொலையாளிகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை விமர்சித்ததாகவும், அதனால் என்மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் அறிக்கை விடப்பட்டள்ளது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் மறு சீராய்வு மனு குறித்து என்னுடைய கருத்தை கேட்டனர்.
அப்போது, உச்ச நீதிமன்றம் ராஜிவ் காந்தி கொலை வழக்கு மட்டும் அல்ல மேலும் சில முக்கிய கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றம் எந்த தீர்ப்பு அளித்தாலும் அதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ள இந்த நேரத்தில் அதை உச்சநீதிமன்றம் முடிவு செய்யும். ஆனால் நான் தமிழக அரசையோ, உச்சநீதிமன்றத்தையோ விமர்சனம் செய்யவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விளக்கிதான் கூறினேன். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு கொடுக்கிறதோ அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 'உச்சநீதிமன்றம் தீர்ப்பை நான் விமர்சித்தேன், எனவே என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறுவது மக்களை திசைத்திருப்ப திரித்து கூறுவதாக உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை விளக்கி கூறினேன். அதனை நான் விமர்சிக்கவில்லை. தமிழக அரசையும், உச்சநீதிமன்றத்தையும் விமர்சித்ததாக கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கட்சி அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு
''நானும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் மற்றும் அமைச்சர்கள் கூடி புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தினசரி காலை 9.30 முதல் 10.30 வரை பொதுமக்கள், கட்சி நிர்வாகிகளை சந்தித்து நிறைகுறைகளை கேட்க உள்ளோம்.'' என்று இக்கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!