சட்டவிரோத பணப் பரிவர்த்தனை: சென்னை உட்பட 100 நகரங்களில் அமலாக்கத்துறை சோதனை

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை: சென்னை உட்பட 100 நகரங்களில் அமலாக்கத்துறை சோதனை
Updated on
1 min read

போலி நிறுவனங்களின் பெயரில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் நாடு முழுவதும் 300 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

கடந்த ஆண்டு நவம்பரில் 1000, 500 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு நீக்கம் செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன்பிறகு போலியான நிறுவனங்களை உருவாக்கி பல ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாடுகளுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு 2 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாடு முழுவதும் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி சென்னை, டெல்லி, கொல்கத்தா, சண்டிகர், பாட்னா, ராஞ்சி, அகமதாபாத், புவனேஷ்வர் உட்பட 100 நகரங்களில் உள்ள சுமார் 300 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீரென சோதனை நடத்தினர். தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் மட்டும் 12 போலி நிறுவனங்களை உருவாக்கி பணப் பரிமாற்றம் செய்துள்ளதாக தெரியவந்தது. அந்த நிறுவனங்களிலும் சோதனை நடந்தது.

பிரதமர் நரேந்திர மோடி அலுவலக அதிகாரிகள் உத்தரவின் பேரில் வருவாய்த் துறை செயலாளர், கார்ப்பரேட் விவகாரத்துறை செயலாளர் ஆகியோரின் கூட்டு தலைமையின் கீழ் கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. போலி நிறுவனங்களின் மீதான புகார்களை இந்த குழுவினரே தற்போது விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in