அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்களுக்கு ரூ.2,500 அபராதம்: போக்குவரத்துத்துறை முடிவு

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்களுக்கு ரூ.2,500 அபராதம்: போக்குவரத்துத்துறை முடிவு
Updated on
1 min read

பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது மீண்டும் அதிரடியாக நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. விதி மீறும் ஆட்டோக்களிடம் ரூ.500 முதல் ரூ.2,500 வரை அபராதம் வசூலிக்கவும் ஆர்டிஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி ஆட்டோக்களுக்கான புதிய மீட்டர் கட்டணம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, கூடுதலாக கிலோ மீட்டருக்கு ரூ.12 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதிக கட்டணம் வசூலிக்கும் மீட்டர் பொருத்தாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடக்கத்தில் 50 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் நடத்திய அதிரடி ரெய்டில் சுமார் 3000 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், படிப்படியாக இந்த ஆட்டோக்கள் விடுவிக்கப்பட்டன.

இதற்கிடையே, கடந்த தீபாவளி பண்டிகையின்போது ஆம்னி பஸ்களில் ஆய்வு நடத்தும் பணியை சிறப்புக் குழுக்கள் மேற்கொண்டன. இதனால், பல இடங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கத் தொடங்கிவிட்டதாக புகார்கள் வருகின்றன. இதையடுத்து, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது மீண்டும் நடவடிக்கை எடுக்க ஆர்டிஓக்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்கு வரத்துத் துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘வழக்கமாக ஆட்டோக்கள் மீது அதிக கட்டணம் வசூல், விதிமுறைகள் மீறல், ஆவணங்கள் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும், அதிக கட்டணம் வசூல், மீட்டர் பொருத்தாதது, பர்மிட் இல்லாதது போன்ற ஆட்டோக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆர்டிஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகள் மீறல், அதிக கட்டணம் வசூலில் ஈடுபடுவோருக்கு ரூ.500 முதல் ரூ.2,500 வரை அபராதம் வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக தலா 3 பேர் அடங்கிய 33 குழுக்களை மீண்டும் செயல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளோம். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ முதலில் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும். பின்னர், தொடர்ந்து ஈடுபட்டால் பர்மிட் ரத்து செய்யப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in