

அம்பத்தூர் அருகே மேம்பாலத்தில் நடத்திய கார் பந்தயத்தால் ஏற்பட்ட விபத்தில் ஐடி ஊழியர் இறந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
அம்பத்தூர் புதூர், பானுநகரைச் சேர்நதவர் பிரேம் ஆனந்த் (30), அம்பத்தூர் ஒரகடம் எஸ்.வி.நகரைச் சேர்ந்தவர் அபிலாஷ் (30) இருவரும் தனியார் ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சென்னை மணலியிலிருந்து - தாம்பரம் செல்லும் மேம்பால புறவழிச் சாலையில் அம்பத்தூர் அருகே சாலையோரம் வண்டியை நிறுத்திவிட்டு, இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
இதனிடையே மணலியிலிருந்து புறப்பட்ட பந்தய கார்கள் தாம்பரத்தை நோக்கி சீறிபாய்ந்து வந்தன. அம்பத்தூர் மேம்பாலத்தில் வந்தபோது, சாலை ஓரத்தில் நின்றிருந்த பிரேம் ஆனந்த், அபிலாஷ் மீது ஒரு கார் மோதியது. இதில், பிரேம்ஆனந்த் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்தை ஏற்படுத்தியவர்கள் உயிருக்கு போராடியவர்களை காப்பாற்றாமல் காரிலிருந்து இறங்கி, பின் தொடர்ந்து வந்த மற்றொரு பந்தய காரில் ஏறி தப்பிச் சென்றனர். இறந்த பிரேம்ஆனந்துக்கு திருமணம் ஆகி சரண்யா என்ற மனைவி உள்ளார்.
இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் காயமடைந்த நிலையில் இருந்த அபிலாஷை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து பந்தய காரை பறிமுதல் செய்ததுடன், தப்பிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், ‘‘இந்த மேம்பாலத்தில் வாரத்தில் 3 நாட்கள் கார் பந்தயம் நடக் கிறது. இந்த சாலையை பயன்படுத்தவே அச்சமாக இருக்கிறது. இங்கு நடக்கும் கார் பந்தயத்தை தடுக்க யாரும் முன்வரவில்லை” என்றனர்.