

போரூரை அடுத்த மவுலிவாக்கத் தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம் கட்டுமானப்பணிகள் நடந்து கொண்டிருந்தபோதே 2014 ம் ஆண்டு ஜூன் மாதம் இடிந்து விழுந்தது.
இந்தச் சம்பவத்தில் 61 பேர் உயிரிழந்தனர். இதன் அருகிலேயே மற்றொரு 11 மாடி கட்டிடம் கட்டப் பட்டு வந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையிலான குழு இடிந்து விழுந்த கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்தது. இந்தக் கட்டிடமும் பலமாக இல்லாததால் இதனை இடிக்க வேண்டும் என்றும் அந்த குழு அரசுக்கு பரிந்துரைத்தது.
இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஆபத்தான அந்த 11 மாடி கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை மேற்கொண்டது. இதை எதிர்த்து கட்டுமான நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து கட்டிடத்தை இடிக்க இடைக்கால தடை பெற்றது. இந்த உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அந்த கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை நியமித்தனர். அவர்கள் ஏப்ரல் மாதம் இந்த கட்டிடத்தை ஆய்வு செய்து கட்டிடம் பலமாக இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து ஆபத்தான 11 மாடி கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்நிலையில் அந்த கட்டிடத்தை இடிக்கும் பணிக்கான ஆயத்த பணி களை சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் மேற்கொண்ட னர். அந்தக் கட்டிடத்தை நவீன முறையில் வெடி மருந்து வைத்து தகர்க்கும் பணி திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கட்டிடத்தின் சுமையைக் குறைக்க அதில் இருந்த கல், மணல், ஜல்லி, இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் அகற்றும் பணி கடந்த 2 மாதமாக நடந்தது. அந்த பணிகள் தற்போது முடிவடைந்துவிட்டன.
இதனை தொடர்ந்து கட்டிடத்தின் கீழ்தளம், தரைத்தளம் மற்றும் 5 வது மாடி தூண்களில் வெடி பொருட்கள் நிரப்ப துளைபோடும் பணி நடந்தது. இந்த மாத இறுதிக்குள் கட்டிடம் இடிக்கப்படும் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே 11 மாடிக் கட்டிடத்தைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவுள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. 100 மீட்டர் தூரத்தைக் குறிக்கும் வகையில் குறி யீடு வரையப்பட்டுள்ளது. இந்தப் பணியில் பொதுப்பணித்துறை நிர் வாகப் பொறியாளர் கல்யாண சுந்தரம், பெருநகர வளர்ச்சி குழும கட்டிட வடிவமைப்பாளர் வாசு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கொண்ட 20-க்கும் மேற்பட்டோர் கொண்ட குழுவினர் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி யில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்தப் பகுதி யில் உள்ள வீடுகளில் ஏற்கனவே விரிசல் உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வீடுகளில் உள்ள விரிசலை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து பதிவு செய்தனர். அங்கு வசிப்பவர்களிடமும் அதிகாரிகள் விவரங்களைக் கேட்டு தெரிந்து கொண்டனர்.
கட்டிடம் இடிக்கப்படும் போது ஏற்படும் அதிர்வினால் அப்பகுதி யில் உள்ள மற்ற கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படுமா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 100 மீட்டர் தூரத்திற்குள் உள்ள கட்டிடங்களில் குறியிடும் பணி மற்றும் வீடியோவில் பதிவு செய்யும் பணி சில நாட்கள் நடைபெறும் என்றும், அது முடிந்த பிறகு இடிக்கப்படும் கட்டிடத்தில் வெடிமருந்து பொருத்தும் பணி தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்பிறகு கட்டிடத்தில் வெடி மருந்து செலுத்தும் தேதி முடிவு செய்யப்பட்டு, இடிக்கப்படும் நாளில் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.