வாசன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் நடவடிக்கை பாயுமா?

வாசன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் நடவடிக்கை பாயுமா?
Updated on
1 min read

ஜி.கே.வாசன் அணியில் சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக சட்டப்பேரவைக்கு கே.கோபிநாத் (ஒசூர்), ஜான் ஜேக்கப் (கிள்ளியூர்), ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), என்.ஆர்.ரெங்கராஜன் (பட்டுக்கோட்டை), எஸ்.விஜயதாரணி (விளவங் கோடு) ஆகிய 5 உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டு, ஜி.கே.வாசன் தலைமையில் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித் துள்ளனர்.

எம்எல்ஏக்கள் என்.ஆர்.ரெங்க ராஜன், ஜான் ஜேக்கப் இருவரும் வாசன் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

கோபிநாத், விஜயதாரணி காங்கிரஸிலேயே உள்ளனர். ஜே.ஜி. பிரின்ஸ் மட்டும் எந்த அணியில் உள்ளார் என்பது தெரியவில்லை. அவர் காங்கிரஸில் நீடிப்பதாக கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

அதேநேரத்தில் பிரின்ஸை தங்கள் பக்கம் இழுக்க வாசன் தரப்பினரும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

ஏனெனில், சட்டப்பேரவையில் ஒரு கட்சியில் இருந்து மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான உறுப்பினர்கள் வெளியேறினால் மட்டுமே அவர்கள் கட்சித்தாவல் தடைச்சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியும். இல்லையேல், அவர்கள் பதவியிழக்க வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவை வட்டாரங்கள் கூறியதாவது:

ஒரு கட்சியில் இருந்து பேரவை உறுப்பினர்கள் வெளியேறினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கட்சித் தலைவர் கடிதம் எழுதினால் அதை பரிசீலிப் போம்.

காங்கிரஸ் தலைவரிடம் இருந்து கடிதம் வந்தால் உறுப்பினர் பலத்தை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும். ஜி.கே.வாசன், தொடங்கும் கட்சியில் 3 எம்எல்ஏக்கள் இருந்தால் அவர்கள் தனிக் குழுவாக செயல்பட முடியும்.

கட்சிக்கு பெயர் வைத்த பிறகு அதுபற்றி எங்களுக்கு வாசன் கடிதம் எழுதினால், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் தனியாக செயல்பட அனுமதிப்போம். அதே நேரத்தில், 2 உறுப்பினர்கள் மட்டும் அவரது கட்சியில் இருந்தால் அவர்கள் பதவியிழக்கவும் வாய்ப்பு உண்டு. சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கட்சி அறையை யாருக்கு ஒதுக்குவது என்பது பற்றியும் முடிவெடுக்க வேண்டியுள்ளது.

தேமுதிகவிலும் அதே நிலைதான் உள்ளது. ஆனால், அக்கட்சித் தலைவர் இதுவரை யார் மீதும் நடவடிக்கை கோரி கடிதம் எழுதவில்லை. அப்படி நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்க நேரிடும் என்பதால் கடிதம் எழுதாமல் இருக்கக்கூடும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ், நேற்றிரவு சென்னை வந்ததாக கூறப்பட்டது. அவரது நிலையை தெரிந்துகொள்வதற்காக பலமுறை போனில் தொடர்பு கொண்டபோதும் பேச முடியவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in