நெய்வேலி நிலக்கரி சுரங்க கிடங்கில் தீ: பெரிய அளவில் பாதிப்பு இல்லை என என்எல்சி தகவல்

நெய்வேலி நிலக்கரி சுரங்க கிடங்கில் தீ: பெரிய அளவில் பாதிப்பு இல்லை என என்எல்சி தகவல்
Updated on
1 min read

என்எல்சி நிறுவன நிலக்கரி சேமிப்புக் கிடங்கில் நேற்று முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை கட்டுப்படுத்திவிட்டதால் பாதிப்பு ஏதும் இல்லை என என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் முதல் சுரங்க விரிவாக்கத்தில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி, திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் டன் கணக்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. நிலக்கரி சேமித்து வைக்கப்பட்டுள்ள பகுதி மலை போல் காட்சியளிக்கிறது.

இந்த நிலக்கரி சேமிப்புக் கிடங்கில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. ஆரம்பத்தில் சிறிய அளவில் இருந்த இந்த தீ, காற்றின் வேகத்தில் மளமளவென பரவி, அதிக அளவில் எரிய தொடங் கியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. சேமித்து வைக்கப்பட்டுள்ள நிலக்கரி தொடர்ந்து எரிவதால் என்எல்சி நிர்வாகத்துக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

எரிந்து வரும் நிலக்கரியை அணைக்க என்எல்சி நிறுவனத் தின் தண்ணீர் லாரிகள் வரவழைக் கப்பட்டுள்ளன. மேலும் அதிக திறன் கொண்ட நீர் தெளிப்பான்கள் மூலம் என்எல்சி தீயணைப்புப் படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் இதேபோல் தீ விபத்து என்எல்சியில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

என்எல்சி நிறுவனம் விளக்கம்

இதுகுறித்து என்எல்சி நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நெய்வேலிக்கு அருகிலுள்ள தனியார் அனல் மின் நிலையம் உற்பத்தியை நிறுத்தியதால், அந்நிறுவனத்துக்கு தர வேண்டிய பழுப்பு நிலக்கரி, சுரங்கம் 1-ஏ கிடங்கில் தேக்கமடைந்தது.

இயற்கையிலேயே வெப்பம் அதிகரிக்கும்போது எரியும் தன்மை கொண்ட பழுப்பு நிலக்கரி மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விப்பது வழக்கம். தற்போது வெப்பம் அதிகரித்துள்ளதால், தேக்கமடைந்துள்ள பழுப்பு நிலக்கரியில் தீப்பிடித்துள்ளது.

தீயை என்எல்சி தீயணைப்புப் படையினர் கட்டுப்படுத்தியுள்ள னர். இதனால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை. தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in