

கூடங்குளம் அணு மின் நிலையத்தில், தற்போது மின்சார உற்பத்தித் தொடங்கிவிட்டது என்று கூறுவது நாடகமே என்று அணுசக்தி எதிர்ப்பாளர்கள் சாடியுள்ளனர்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக, தொடர் போராட்டம் நடைபெற்றுவரும் இடிந்தகரையில், பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று (புதன்கிழமை) கூடி, ஆலோசனை நடத்தினர்.
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்துக்குப் பின் அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கை:
இடிந்தகரையில் இன்று (புதன்கிழமை கூடிய நாங்கள் அனைவரும், கூடங்குளம் 1 மற்றும் 2-வது அணு உலைகள் பற்றி மத்திய அரசும், அதன் அணுசக்தித் துறையும், ஏனைய அரச அமைப்புக்களும் தமிழினப் பகை நோக்கோடு, தமிழ் மக்கள் உயிருக்கோ, ஈடுபாடுகளுக்கோ கடுகளவும் மதிப்புக் கொடுக்காமல் தொடர்ந்து முன்னுக்குப்பின் முரணாக, உண்மைக்குப் புறம்பாக தகவல்கள் வெளியிட்டு, மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஒரு மத்திய இணை அமைச்சர் இதுவரை 89 முறை “கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் இயங்கும்” என்று திரும்பத் திரும்பப் பொய் சொல்லி வருகிறார். இந்தியப் பிரதமர் 2011 டிசம்பர் மாதமும், 2012 மார்ச் மாதமும் “கூடங்குளம் உடனடியாக இயங்கும்” என்று சொன்னார்.
தற்போது மின்சார உற்பத்தித் துவங்கி விட்டது என்று ஓர் அருவருப்பான நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். “160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகி விட்டது” என்று கூடங்குளம் அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால் மின் இணைப்பு அதிகாரிகள் “இரண்டாம் நிலை அமைப்பு தோல்வியடைந்துவிட்டது” என்று தங்கள் இணைய தளத்தில் பதிவு செய்து, மின்சாரம் வந்ததாகக் குறிப்பிடவில்லை.
ஜனநாயக நாட்டின் அரசு இப்படி தனது மக்களைத் தொடர்ந்து ஏமாற்றுவது ஒரு மிகப் பெரிய ஆபத்தான விஷயம். கூடங்குளம் 1 மற்றும் 2-வது அணு அலைகள் பற்றிய உண்மைத் தகவல்களை மக்களுக்குச் சொல்லி, ஆபத்தான நிலையில் இருக்கும், தரமற்றப் பொருட்களால் கட்டப்பட்டிருக்கும் அந்த நிலையங்களை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கூட்டாகக் கோரிக்கை வைக்கிறோம்.
முதல் இரண்டு உலைகளே முடங்கிக் கிடக்கும் நிலையில், மூன்றாவது, நான்காவது உலைகளுக்கு ஒப்பந்தம் போடுவது என்பது மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை, தமிழினப் பகை நோக்கை இன்னும் உறுதிப்படுத்துவதாக உள்ளது.
இந்திய இழப்பீடுச் சட்டத்தை அவமதித்து, ரஷ்ய அரசுக்கு உதவும் பொருட்டு இந்த நடவடிக்கையில் இறங்குவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தத் திட்டத்தை உடனடியாகக் கைவிடக் கோருகிறோம்.
மத்திய அரசின், அதன் அணுசக்தித் துறையின் தமிழினப் பகைப் போக்கை எதிர்த்து நிற்கும், கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்துப் போராடும் தமிழ் மக்களுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.