

சுற்றுச்சூழலை காப்பதற்காக, கிராமங்களைத் தத்தெடுத்து மாத ஊதியத்தின் ஒரு பகுதியைச் செலவிட்டு, சீமைக் கருவேல மரங்களை அழிக்கும் இளைஞர்கள், புருவம் உயர்த்த வைத்துள்ளனர். அவர்களின் விழிப்புணர்வால், சீமைக் கருவேல மரங்கள் நிறைந்து காணப்பட்ட இடம் தற்போது விளையாட்டுப் பூங்காவாக உருவாகி உள்ளது.
ஊருக்கு 10 இளைஞர்கள் சமூக அக்கறையுடன் இருந்தால், அந்த கிராமத்தின் முன்னேற்றப் பாதை பிரகாசமானதாக இருக்கும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம். இக்கிராமத்தைச் சேர்ந்த இளை ஞர்கள் 2001-ம் ஆண்டிலேயே, தாங்கள் விளையாட்டுப் பயிற்சி எடுப்பதற்காக ஒரு மைதானத்தை உருவாக்கும் முயற்சியில் இறங் கினர். அங்கு புதராக படர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்களை காலை, மாலை மற்றும் விடுமுறை நாட்களில் அகற்றினர்.
அதன் பலனாக, கபடி, கைப்பந்து, கோகோ, கூடைப்பந்து மற்றும் உடற்பயிற்சிகள் எடுப்பதற் கான சிறந்த விளையாட்டு மைதானமாக அது மாறியது. அங்குப் பயிற்சி எடுப்பதற்காக சுற்றுச்சூழலை இயற்கை சூழலுடன் மாற்றிய இளைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று அரசுப் பணியில் உள்ளனர். அனைவருமே விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்த வர்கள். சீமைக் கருவேல மரங் களை அழித்து விளையாட்டு மைதானமாக்கியதன் விளைவு அவர்கள் எதிர்காலம் பிரகாச மானது. அதற்கு நன்றிக்கடனாக அக்கிராமத்தை தத்தெடுத்த அந்த இளைஞர்கள், அப்பகுதி முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றி வருகின்றனர்.
சீமைக் கருவேல அழிப்பு இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுப்ரதீபன், மைசூரு ஸ்டேட் வங்கி உதவி மேலாளர் ஜீவகுமார், பொறியாளர் அருள், தலைமைக் காவலர் சுரேஷ், மென்பொறியாளர் தினேஷ் ஆகியோர், தங்களது முயற்சி குறித்து, ‘தி இந்து’விடம் கூறியதாவது:
ராஜாக்கமங்கலத்தின் சுற்றுப் பகுதிகள் எங்கும் கருவேல மரங்கள் அதிக அளவில் பெருகி உள்ளன. கார்பன்டை ஆக்ஸைடை அதிகமாக வெளி யிட்டு, சுற்றுச்சூழலை கெடுத்தல், ஈரப்பதத்தை உறிஞ்சி பருவமழை பெய்யவிடாமல் தடுப்பது, நிலத்தடி நீரை மாசு கலந்த தண்ணீராக மாற்றுவது, கால்நடைகளின் ஆரோக்கியத்தைக் கெடுப்பது, நிலத்தடி நீரை வேகமாக உறிஞ்சி நீர் ஆதாரத்தை குறைப்பது போன்ற கருவேல மரத்தின் தீமைகள் குறித்து, விழிப்புணர்வு பேனர்களை ஊரில் வைத்துள்ளோம்.
இங்கு உள்ள தெக்குறிச்சி, அளத்தங்கறை, பண்ணையூர், முருங்கவிளை போன்ற கிராமங்களிலும் கருவேல மரங்களை அகற்றும் பணியைத் தொடங்கி உள்ளோம். மின்வாரியம், ஊராட்சி, பொதுப்பணித் துறை போன்ற இடங்களிலும் துறை அனுமதி பெற்று சீமைக் கருவேல மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி வருகிறோம்.
விடுமுறையிலும் பணி
பிற மாவட்டங்களில் பணி யாற்றி வரும் இப்பகுதி இளைஞர்கள் விடுமுறை நாட்களில் இப்பணி மேற்கொள்ள இங்கு வந்துவிடுவார்கள். சீமைக் கருவேல மரங்களை அகற்றிவிட்டு, மக்களுக்குப் பலன் தரும் புங்கை மரம் போன்றவற்றை நட்டு கொடுக்கிறோம். மாத ஊதியத்தின் ஒரு பகுதியை இதற்காக செலவழித்து வருகிறோம். இன்னும் ஓராண்டில் சீமைக் கருவேல மரம் இல்லாத கிராமங்களாக ராஜாக்கமங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதியை மாற்றிவிடுவோம் என்றனர்.