

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சட்டவிரோத கும்பல் நடத்திய வன்முறை சம்பவங்களில் 142 காவல் துறையினர் உட்பட 280 பேர் காயமடைந்ததாகவும், 57 வாகனங்கள் எரிக்கப்பட்டதாகவும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரி வித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி நடந்த போராட்டத்தின்போது கடந்த 23-ம் தேதி சென்னை ஐஸ்ஹவுஸ், பெசன்ட் சாலை, அவ்வை சண்முகம் சாலையில் சட்ட விரோத கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதோடு, காவல்துறை வாகனங்களையும் எரித்தனர்.
மற்றொரு சட்ட விரோத கும்பல் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்துக்கு தீ வைத்தது. நடுக்குப்பம் மீன் மார்க்கெட் பகுதியில் இருந்த தற்காலிக பந்தல்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் காவல் துறையினர் தக்க எச்சரிக்கைக்கு பின்பு குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்து அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
ஜாம்பஜார், பாரதி சாலை, பூந்த மல்லி நெடுஞ்சாலை, நாயர் பாலம், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, வட பழனி நூறடிச் சாலை, அரும்பாக்கம் நூறடிச் சாலை, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம், மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் போன்ற இடங்களில் சட்ட விரோத கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. இதில் காவல்துறையினர், பொது மக்களின் வாகனங்கள் எரிக்கப் பட்டன. காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டன.
காவல்துறையினர் மேற் கொண்ட நடவடிக்கைகளை கண் டித்து 76 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 12 ஆயிரத்து 500 பேர் சாலை மறியலில் ஈடுபட்டு கலைந்தனர்.
280 பேர் காயம்
சென்னையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் காவல் துறையினர் 142 பேரும், போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் 138 பேரும் காயமடைந்தனர். அவர்களில் காவல் துறையினர் 68 பேரும், போராட்டக்காரர்கள் 41 பேரும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வன்முறையாளர்கள் தீ வைத் ததில் 19 காவல், 2 தீயணைப்பு வாகனங்கள், 1 சிறைத் துறை வாகனம், 1 மாநகர அரசுப் பேருந்து ஆகியவை எரிந்து சேதமாகின. இதுதவிர விஷமி களால் பொதுமக்களின் 4 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம், 29 இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. மேலும் 15 காவல் துறை வாகனங்கள், 41 பிற அரசு வாகனங்கள் சேதமடைந்தன.
215 பேர் கைது
சென்னையில் நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது இடங்களில் சாலை, ரயில் மறியலில் ஈடுபட்டது தொடர்பாக 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அலங்காநல்லூரில் விழாக் குழுவினரும், பொதுமக்களும் போராட்டத்தை விலக்கிக்கொள் வதாக அறிவித்த பிறகும் ஒரு கும்பல் போராட்டத்தை தொடர்ந்ததோடு வன்முறையிலும் இறங்கியது. இதனால் காவல் துறையினர் குறைந்தபட்ச பலத்தை உபயோகித்து கலைந்து போகச் செய்தனர்.
சென்னை தவிர மற்ற இடங்களில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவங்களில் 27 காவல் துறை யினர், 4 அரசு பணியாளர்கள், 19 போராட்டக்காரர்கள் காய மடைந்தனர். 7 காவல் வாகனங்கள், அரசு பேருந்துகள் உள்பட 50 அரசு வாகனங்கள், 2 தனியார் வாகனங்கள் சேதப்படுத் தப்பட்டன. இது தொடர்பாக 146 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.