

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் படிப்புக்காக பெற்ற கல்விக் கடனை ஒரே தவணையில் கட்டச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக கோவை ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மனுநீதிநாள் முகாம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) தா.கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.
கோவையை சேர்ந்த பெண் ஒருவரும், அன்னூர் எல்லப்பம்பாளையத்தை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரும் புகார் மனுக்களை அளித்தனர்.
அதில், ‘எங்கள் பிள்ளைகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் முறையே ரூ.90 ஆயிரம் மற்றும் ரூ.60 ஆயிரம் கல்விக் கடனை 2001-ம் ஆண்டில் பெற்றனர். அவர்கள் படிப்பு முடித்து வேலை கிடைக்காமல் திண்டாடி சமீபத்தில்தான் தனியார் நிறுவனமொன்றில் சொற்ப சம்பளத்தில் வேலையில் சேர்ந்துள்ளனர்.
அப்படியிருக்க, தற்போது கல்விக் கடனை முழுவதும் கட்டுமாறு தனியார் நிறுவனத்திடமிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. ‘கல்விக் கடனை வட்டியும் அசலுமாக இந்த மாதத்துக்குள் செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தொலைபேசியிலும் பேசி, ‘பணத்தை இந்த மாதத்தில் செலுத்தாவிட்டால் எங்கள் நடவடிக்கையை நீங்கள் தாங்க முடியாது’ என்றும் மிரட்டுகிறார்கள்’ என குறிப்பிட்டிருந்தனர்.
எங்கள் கல்விக் கடன் தொகையை அந்த வங்கி, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடம் விற்றுவிட்டதாகவும், அதனாலேயே இந்த நெருக்கடி என்றும், படிப்பு முடிந்து பணியில் சேர்ந்து 10 ஆண்டுகளுக்குள் தவணையை செலுத்தலாம் என்றிருக்கும் நிலையில் இவர்கள் உடனே பணத்தை செலுத்தச் சொல்வது என்ன நியாயம்? என்றும் கண் கலங்கினர் புகார் தெரிவித்தவர்கள்.
புகார் அளிக்க வந்த பெண், கணவனை இழந்தவர். இவரது மகளும் படித்துக் கொண்டிருக்கிறார். சொக்கலிங்கம் நெசவுத் தொழிலாளி. இரண்டு குடும்பங்களுக்கும் போதிய வருமானம் இல்லை.
இந்த சூழ்நிலையில், நெருக்கடி செய்தால் நாங்கள் தற்கொலைதான் செய்து கொள்ள நேரிடும் என்றும் கண்ணீர் விட்டனர். ‘புகார் கொடுக்க வந்தது இப்போதைக்கு நாங்கள் இருவர்தான். குறிப்பிட்ட வங்கிக்கும், தனியார் நிறுவனத்துக்கும் அலைந்துகொண்டு கதறிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். இதன் மீது நடவடிக்கை தேவை. தவணை முறையில் கடனை செலுத்த அனுமதிக்க வேண்டும்’ என்றனர்.
இவை தவிர, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள், பணி நிரந்தரம்கோரி விண்ணப்பம் ஏந்தி வந்தனர். நரசீபுரம் கிராமத்தில் உள்ள ஒரே ஒரு டாஸ்மாக் கடையில் ஆண்கள் மட்டுமல்ல, பள்ளிப் குழந்தைகள் கூட மது அருந்தி கெட்டுப்போவதாகவும், அதை அகற்றக்கோரியும் அந்த கிராமத்துப் பெண்கள் திரளாக வந்து மனு அளித்தனர்.
வால்பாறை முடீஸ் டவுன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராம மக்கள், அடிப்படை வசதிகள் கோரி மனு அளித்தனர்.
கோவை மேற்கு எல்லையில் ஆன்மீக, கல்வி மையங்கள் பெயரில் உள்ள வன ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சமூக நீதிக் கட்சியை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். சின்னவேடம்பட்டியை சேர்ந்த மயிலாத்தாள் என்ற பெண், தன்னை அமெரிக்காவில் வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று சம்பளம் தராதது குறித்து கேட்டதற்கு தொல்லை தந்த குடும்பத்தினர் மீது நடவடிக்கை கோரி, மகள் மற்றும் கணவனுடன் வந்து மனு அளித்தார்.