

வேறு ஒரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர் வி.பி.தனபால்.
தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் காலை 11 மணிக்கு கூடியது. அவையில் நம்பிக்கை தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். அப்போது, ரகசிய வாக்கெடுப்பே நடத்த வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் செம்மலை கோரிக்கை விடுத்தார். இதனால், அவையில் சிறிது நேரம் அமளி நிலவியது. அதைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினர்.
சிறிது நேர அமளியைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய மு.க.ஸ்டாலின், "அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சிறைக்கைதிகள் போல் அழைத்துவரப்பட்டுள்ளனர். ரகசிய வாக்கெடுப்பு நடத்துவதே உண்மையான ஜனநாயகத்துக்கு வித்திடும். ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்திருக்கும்போது அவசரமாக வாக்கெடுப்பு நடத்துவதற்கு காரணம் என்ன. எனவே, வேறு ஒரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும்" என்றார்.
ஆனால், ஸ்டாலினின் கோரிக்கையை நிராகரிப்பதாக சபாநாயகர் தெரிவித்துவிட்டார். ஆளுநர் அளித்த அவகாசத்தை கருத்தில் கொண்டே இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறுவதாகக் கூறி ஸ்டாலின் கோரிக்கையை அவர் நிராகரித்தார்.