

தனியார் இடங்களைப் போல அரசு இடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களையும் வெட்டி அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தன்னார்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு இந்த ஆண்டு வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை, நிலத்தடிநீர், நீர்நிலைகளில் உள்ள நீரின் அளவு என ஒட்டுமொத்த நீராதாரமும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில், காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தக்கூடிய சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த அடிப்படையில், அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன.
கோவையிலும், தனியார் பட்டா நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை 15 நாட்களுக்குள் வெட்டி, வேருடன் முழுமையாக அப்புறப்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அனைத்து தரப்பினரும் தங்களது இடத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், தனியார் இடங்களை விட, அரசுக்கு சொந்தமான வறண்ட நீர்நிலைகளிலும், ஆயிரக்கணக்கான ஏக்கர் காலி இடங்களிலும் தான் சீமைக் கருவேல மரங்கள் அதிகம் அடர்ந்து காணப்படுகின்றன. அதை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என தன்னார்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், அரசின் நடவடிக்கைகளை எதிர்பார்க்காமல், நீர்நிலைகளிலும், பொது இடங்களிலும் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் சமூக ஆர்வலர்கள் தன்னிச்சையாக களம் இறங்கியுள்ளனர். நீர் வற்றி அடையாளம் இழந்து காணப்படும் கெளசிகா ஆற்றில் நிறைந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை பொதுமக்களும், மதிமுகவினரும் நேற்று தொடங்கினர். அதேபோல கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், அனைத்து குளங்களிலும் சீமைக் கருவேல மரங்களை அகற்றத் திட்டமிட்டுள்ளனர். முதல்கட்டமாக பேரூர் பெரியகுளத்தில் ஆக்கிரமித்திருந்த சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதிமுக இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈஸ்வரன் கூறியதாவது: கெளசிகா நதியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றினால் மட்டுமே அதன் நீராதாரத்தை மீட்டெடுக்க முடியும். சீமைக் கருவேல மரங்கள் பரவலால், கருவேல மரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. ஆபத்தை விளைவிக்கும் இந்த மரங்களை அகற்ற வேண்டுமென ஆட்சியரிடம் ஏற்கெனவே வலியுறுத்தினோம். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே, அதுவும் தனியார் இடங்களில் மட்டும் இந்த மரங்களை வெட்ட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவை அதிகம் ஆக்கிரமித்துள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், ஆறுகள், ஓடைகள், குளங்களில் இந்த மரங்களை வெட்டி அகற்ற எந்த திட்டத்தையும் மாவட்ட நிர்வாகம் அறிவிக்கவில்லை.
எனவே உடனடியாக அனைத்து துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள், விவசாயிகளை உள்ளடக்கிய குழுவை ஏற்படுத்தி சீமை கருவேல மரங்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மரத்தை வெட்டிச் செல்ல மர வியாபாரிகள் பலர் தயாராக இருக்கின்றனர். ஆனால் அனுமதி பெறுவதில் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். எனவே அந்த நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்றார்.