

சீமைக் கருவேல மரங்களைப் போல யூக்கலிப்டஸ் மரங்களை அகற்ற வேண்டுமென அரியலூர் மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருமானூரில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில், நீதிமன்ற உத்தரவின் பேரில் மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் பல இடங்களில் வேலைகள் தொடங்கப்படவில்லை.
சீமைக் கருவேல மரங்களைப் போல, தண்ணீரை அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்ட யூக்கலிப்டஸ் மரங்களையும் அகற்ற வேண்டும். தமிழகத்தில் லோக்ஆயுக்தா சட்டத்தை கொண்டு வரவேண்டும். தஞ்சை- ஆத்தூர் இடையே இருப்புப் பாதை வழித்தடம் கொண்டு வரவேண்டும். குடியிருப்பு பகுதிகளில் பன்றி வளர்ப்பை தடுக்க வேண்டும். நெடுவாசலில் நடைபெறும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, அச்சங்கத்தின் தலைவர் வரதராசன் தலைமை வகித்தார். செயலாளர் கணேசன் வரவேற்றார். பொருளாளர் சக்திவேல் நன்றி கூறினார்.