Published : 12 Jun 2016 09:59 AM
Last Updated : 12 Jun 2016 09:59 AM

பணி நிரந்தரம் உள்ளிட்ட 3 கோரிக்கைகள் ஏற்பு: என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு

பணி நிரந்தரம் உள்ளிட்ட 3 கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் நேற்று நள்ளிரவு முதல் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்ட என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் களின் வேலைநிறுத்தம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) ஏராள மான ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர். என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத் தினர் பணி நிரந்தரம், சுரங்கச் சட்டப்படி அகவிலைப்படி உயர்வு, வீடு, இடம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்குதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்றும்படி வலியுறுத்தினர். இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 29, மே 20, 27 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் தீர்வு கிடைக்காததால் ஜூன் 11-ம் தேதி (நேற்று) இரவு முதல் 10,500 ஒப்பந்த தொழிலாளர் கள் வேலைநிறுத்தப் போராட்டத் தில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான நோட்டீஸையும் என்எல்சி நிர்வாகத்திடம் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் வழங்கினர்.

இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக துணை ஆணையர் அலுவலகத்தில் மத்திய தொழிலாளர் துறை உதவி ஆணையர் எஸ்.அண்ணாதுரை தலைமையில் நேற்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. என்எல்சி நிர்வாகம் சார்பில் கூடுதல் பொதுமேலாளர் திருக்குமார், மனிதவள மேம்பாட்டுத் துறை மேலாளர் கருணாமூர்த்தி, ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் செல்வமணி, பொருளாளர் கல்யாணசுந்தரம், ஏஐடியுசி மாநிலப் பொருளாளர் விருதை காந்தி, கடலூர் மாவட்டச் செயலாளர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை பகல் 11.30 முதல் பிற்பகல் 2.30 மணி வரை நடைபெற்றது.

பேச்சுவார்த்தை குறித்து ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்புச் செயலாளரும், ஏஐடியுசி கடலூர் மாவட்டச் செயலாளருமான எம்.சேகர் கூறியதாவது:

இன்று நடந்த நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் முக்கிய கோரிக்கைகளான ஒப்பந்தத் தொழி லாளர்கள் பணி நிரந்தரம், சுரங்கச் சட்டப்படி அகவிலைப்படி உயர்வு, வீடு, இடம் கொடுத்தவர்களுக்கு வேலை ஆகியவற்றை என்எல்சி நிர்வாகமும், தொழிலாளர் துறையும் ஏற்றுக் கொண்டுள்ளன. மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற 2 வார அவகாசம் கேட்டுள்ளனர். இதனால், வேலைநிறுத்தப் போராட் டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பணி நிரந்தரம் மற்றும் காலிப் பணியிடங்கள் குறித்த பட்டியலை யும் அகவிலைப்படி, தொழிலாளர் களுக்கு வழங்கிய குறைந்தபட்ச ஊதியம் தொடர்பான ஆவணங் களை என்எல்சி நிர்வாகமும், ஒப்பந்தத் தொழிலாளர் சங்கமும் வரும் 15-ம் தேதிக்குள் தொழிலாளர் நலத் துறைக்கு வழங்க வேண்டும். பணி மறுக்கப்பட்ட 523 பேரின் பட்டியலையும் வழங்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. வரும் 23-ம் தேதி கோரிக்கைகள் குறித்து தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்காலிகமாக வேலை நிறுத்தப் போராட்டத்தை தள்ளி வைத்துள்ளோம். 23-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பிறகுதான் போராட்டத்தை கைவிடுவது பற்றி முடிவெடுக் கப்படும்.

இவ்வாறு சேகர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x