Last Updated : 21 Sep, 2013 09:51 AM

 

Published : 21 Sep 2013 09:51 AM
Last Updated : 21 Sep 2013 09:51 AM

ஓட்டை உடைசலான தூத்துக்குடி அனல்மின் நிலையம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவதால் மின் உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும் 10 முறைக்கு மேல் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் தென்மாவட்டங்கள் அடிக்கடி இருளில் மூழ்குகின்றன.

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான தூத்துக்குடி அனல்மின் நிலையம் தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான பெரிய அனல்மின் நிலையம். இங்கு தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன.

முதல் இரண்டு யூனிட் 1979-ம் ஆண்டு உற்பத்தியை தொடங்கின. 1980-ல் 3-வது யூனிட்டும், 1982-ல் 4 மற்றும் 5-வது யூனிட்டுகளும் நிறுவப்பட்டு, உற்பத்தி தொடங்கியது. தென்மாவட்டங்களின் மின் தேவையையும் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகித்தது. காலப்போக்கில் முறையான பராமரிப்பு இல்லாததால் மின் உற்பத்தி குறையத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மின் பற்றாக்குறையால் தமிழகம் கடும் நெருக்கடியை சந்தித்தது. இதனால், தூத்துக்குடி அனல்மின் நிலையம் தனது மொத்த திறனான 1050 மெகாவாட்டை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக 5 யூனிட்டுகளும் இடைவிடாமல் இயக்கப்பட்டன.

அதேநேரம், யூனிட்டுகளில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அடிக்கடி பழுது ஏற்படுவது வாடிக்கையானது. இதுதவிர சுழற்சி முறையில் ஒரு யூனிட் எப்போதும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்படுவதால் பெரும்பாலான நாள்கள் குறைந்தது 2 யூனிட்டுகள் செயல்படுவதில்லை. இதனால் 400 முதல் 500 மெகாவாட் வரை உற்பத்தி குறைகிறது.

இங்கு பழுது ஏற்படும் போதெல்லாம் மின்வெட்டால் தென் மாவட்டங்கள் இருளில் மூழ்குகின்றன.

அனல் மின் நிலையத்தின் ஐந்து யூனிட்டுகளில் உள்ள கொதிகலன்கள் அனைத்தும் 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலமையை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும். ஆனால், தற்போது பயன்படுத்தப்படும் நிலக்கரியில் சாம்பல் அதிகமாக வெளியேறுவதால்தான் குழாய்களில் அடிக்கடி ஓட்டை ஏற்படுகிறது.

இதுகுறித்து நிலையத்தின் தலைமை பொறியாளர் வள்ளியப்பன் கூறியது: 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பழுதான குழாய்கள் மாற்றப்படுகிறது. மேலும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம். முன்பிருந்தது போல் அல்லாமல் தற்போது அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி முழுதிறன் அளவுக்கு உள்ளது. தொடர்ச்சியாக இயங்குவதால், அவ்வப்போது சிறு சிறு கோளாறுகள் ஏற்படுகின்றன. ஆண்டிற்கு ஒரு முறை 40 நாள் பராமரிப்பு பணிகளை செய்கிறோம்.

தற்போது உள்நாட்டு நிலக்கரியை கொண்டே மின் உற்பத்தி நடக்கிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தை பொறுத்தவரை இன்னும் பல ஆண்டுகள் சிறப்பாக செயல்பட முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x