

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராடின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சரிவுக்குள்ளான ஆஸ்திரேலியாவை, பிராட் ஹேடின்-மிட்செல் ஜான்சன் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்து சரிவிலிருந்து மீட்டது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் பேட்டிங்கை தேர்வு செய்தார். கிறிஸ் ரோஜர்ஸும், டேவிட் வார்னரும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸை தொடங்கினர்.
ஸ்டூவர்ட் பிராட் அபாரம்
3 மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் ஸ்டூவர்ட் பிராட் கேட்ச் ஆனபோதும், அவருக்கு நடுவர் அவுட் கொடுக்கவில்லை. அவர் வெளியேறாமல் தொடர்ந்து விளையாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கோபமடைந்த ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீமான், ஸ்டூவர்ட் பிராட் ஆஸ்திரேலியா வரும்போது எங்கள் நாட்டு ரசிகர்கள் அவரை அழவைப்பார்கள் என்று கூறியிருந்தார்.
லீ மான் கூறியது போலவே ஸ்டூவர்ட் பிராடுக்கு எதிராக ஆஸ்திரேலிய ரசிகர்கள் கூச்சல் போட்டனர். ஆனால் ஸ்டூவர்ட் பிராட், ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களில் ஒருவரான கிறிஸ் ரோஜர்ஸை (1 ரன்) வீழ்த்தி, அந்த அணிக்கு சரிவை ஏற்படுத்தியதோடு, ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கும் பதிலடி கொடுத்தார். இதன்பிறகு வந்த வாட்சன் 22 ரன்களிலும், கேப்டன் கிளார்க் 1 ரன்னிலும் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
ஆஸி தடுமாற்றம்
பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி மீண்டும் அணிக்குத் திரும்பிய டேவிட் வார்னர், 82 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்த நிலையில், பிராட் பந்துவீச்சில் வெளியேறினார். அறிமுகப் போட்டியில் விளையாடிய ஜார்ஜ் பெய்லி 3 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்தார் விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின். இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 59 பந்துகளைச் சந்தித்த ஸ்டீவ் ஸ்மித் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் 132 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸ்திரேலியா.
இதையடுத்து பிராட் ஹேடினும், மிட்செல் ஜான்சனும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா சரிவிலிருந்து மீண்டது. இருவரும் மிகவும் நிதானமாக விளையாடிபோதும், மோசமான பந்துகளைத் தண்டிக்க தவறவில்லை. பிராட் ஹேடின் 100 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்தார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 15-வது அரைசதமாகும்.
இதன்பிறகு ஜான்சன் 100 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 8-வது அரைசதம் இது. அந்த அணி 246 ரன்களை எட்டியபோது இந்த ஜோடியைப் பிரித்தார் ஸ்டூவர்ட் பிராட். 134 பந்துகளைச் சந்தித்த ஜான்சன் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்து போல்டு ஆனார்.
பின்னர் வந்த பீட்டர் சிடில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்துள்ளது.
பிராட் ஹேடின் 132 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 78, ரியான் ஹாரிஸ் 4 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 20 ஓவர்களில் 65 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆண்டர்சன் இரு விக்கெட்டுகளையும், டிரம்லெட் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 2-வது நாள் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.