ஹைட்ராலிக் லாரியில் இருந்து குப்பைத்தொட்டி விழுந்து தொழிலாளி பலி

ஹைட்ராலிக் லாரியில் இருந்து குப்பைத்தொட்டி விழுந்து தொழிலாளி பலி
Updated on
2 min read

கோவை டவுன்ஹாலில் குப்பை அள்ளும்போது மாநகராட்சி லாரியின் பிடியில் இருந்து நழுவிய குப்பைத் தொட்டி துப்புரவுத் தொழிலாளி மீது விழுந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவை தெற்கு உக்கடம் சிஎம்சி காலனியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் ரமேஷ்குமார் (எ) ரமேஷ் (28). பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், கடந்த ஒரு வருடமாக மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்தார். தினசரி அதிகாலை வேளைகளில் ஆங்காங்கே குப்பையைச் சேகரித்து குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

வழக்கம்போல நேற்று காலை 6 மணியளவில் கோவை டவுன்ஹால் மணிக்கூண்டு சந்திப்பின் அருகே குப்பையைச் சேகரிக்க குப்பை லாரி வந்தது. லாரியை மதுக்கரை மரப்பாலத்தைச் சேர்ந்த (29) பிரவீன்குமார் ஓட்டி வந்தார். உதவியாளராக வந்த ரமேஷ், குப்பைத் தொட்டியை, லாரியின் ஹைட்ராலிக் பிடியில் பொருத்தி, லாரியில் சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, ஹைட்ராலிக் பிடியில் இருந்து விலகிய இரும்பு குப்பைத் தொட்டி கீழே நின்றிருந்த ரமேஷ் மீது விழுந்தது. அதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

தகவலறிந்து வந்த போலீஸார், அவரது உடலை கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் திரண்டனர்.

குப்பையைச் சேகரித்துச் செல்லும் ஹைட்ராலிக் இயந்திரத்துடன் கூடிய லாரி, சரிவர பராமரிக்கப்படாததே விபத்துக்குக் காரணம் எனக்கூறி, ஒப்பந்ததாரர், அதை ஆய்வு செய்யாத சுகாதார ஆய்வாளர், மேற்பார்வையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை துப்புரவுத் தொழிலாளர்கள் வலியுறுத்தினர். அதற்கு மாநகராட்சி அலுவலர்கள் உரிய பதில் தராததால் மருத்துவமனை வளாகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிலர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உயிரிழந்த தொழிலாளியின் இறுதிச்சடங்குக்காக அவரது வைப்புத் தொகையில் இருந்து ரூ.40 ஆயிரமும், பணப்பலன்களும் முழுமையாக வழங்கப்படும் என உறுதியளித்தனர். அவரது குடும்பத்தினருக்கு பணி வழங்கவும், போலீஸ் விசாரணையின் அடிப்படையில் விபத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர்.

இதனிடையே, குப்பை லாரியை கவனக்குறைவாக இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக ஓட்டுநர் பிரவீன்குமார் (29) மீது கோவை போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ரமேஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in