

மருத்துவ மாணவர்கள் போராட்டம் குறித்த தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்த விவரம் நீதிமன்றத்திடம் அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழக மருத்துவ மாணவர்கள் மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் கூடுதல் மதிப்பெண் சலுகை வேண்டி 15 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் காரணமாக ஏழை மற்றும் எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சைகள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளதாகவும், மேலும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டம் குறித்து சென்னையைச் சேர்ந்த கதிர்வேலன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதிகள் என். கிருபாகரன், பார்திபன் அடங்கிய அமர்வு முன் விசரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், "அரசு மருத்துவ மாணவர்களின் போராட்டத்தால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இனி என்ன நடக்கப் போகிறது? என்பதை தமிழக சுகாதாரத் துறை செயலாளர் இன்று மதியம் பிற்பகல் 2.30 மணியளவில் ஆஜராக வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.
தமிழக சுகாதாரத் துறை செயலாளர் நேரில் ஆஜர்
நீதிபதிகள் உத்தரவின்படி தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மதியம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது நீதிபதிகள், ''மருத்துவ மாணவர்களின் போரட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எஸ்மா ( எஸ்மா என்பது அத்தியாவசிய சேவை பராமரிப்பு சட்டமாகும். எஸ்மாவின் படி வேலை நிறுத்தம் செய்ததாக கைது செய்து ஆறு மாதம் சிறையில் அடைக்கலாம்). சட்டத்தைப் பயன்படுத்தலாமே'' என தமிழக அரசுக்கு அறிவுரை கூறினர்.
இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, "மருத்துவ மாணவர்களின் போராட்டம் தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் விவரம் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவர்களில் ஒரு பிரிவினரே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நோயாளிகளுக்கு பாதிப்பின்றி அளிக்கும் மருத்துவ சேவைகள் குறித்து விளக்கம் அளித்தோம்.
மேலும் போராட்டத்தை பேச்சு வார்த்தையின் மூலம் முடிவுக்கு கொண்டுவர நீதிபதிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர 2 வாரம் தமிழக அரசு சார்பில் கால அவகாசம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.