

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் ஆம் ஆத்மி கட்சி மீது, மத்திய அரசு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பான்மை பெறாத நிலையில், மீண்டும் ஒரு தேர்தலை மக்கள் மீது திணிக்கக் கூடாது என்ற நோக்கத்தில், காங்கிரஸ் தலைமை ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தது.
மிகப்பெரிய மாற்றத்தை ஆட்சி முறைகளில் கொண்டு வருவதாக, சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்த ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லியின் மையப் பகுதியில் அமர்ந்து போராட்டம் நடத்துவதும், அங்கேயே படுத்து தூங்குவதும், இந்திய தேசத்தின் குடியரசு தின அணிவகுப்பை சீர்குலைக்கும் வகையில், அதே பகுதியில் தொண்டர்களை குவித்து வைப்பது எவ்வளவு தேச விரோதப் போக்கு என்பதை, ஊடகங்கள் தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
அனைத்து அரசியல் அமைப்புகளும், அதனதன் வரையறைக்குள் இயங்குகிற போதுதான், நாட்டில் சீரான ஆட்சிமுறை கொண்டு வரமுடியும். வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரவிந்த் கேஜ்ரிவால், மக்கள் கவனத்தை திசைதிருப்ப இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
குடியரசு தின அணிவகுப்புக்கு இடைஞ்சல் ஏற்பட்டால், ஆம் ஆத்மி கட்சியினரை அப்புறப்படுத்த வேண்டும் அல்லது ஆம் ஆத்மி அரசை டிஸ்மிஸ் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சி வர வேண்டும். இந்த இரண்டும் நடந்தால், தன் கட்சியைப் பலப்படுத்த சரியான வழி என்று கேஜ்ரிவால் கருதுகிறார்.
காஷ்மீர் விவகாரத்தில் பிரசாந்த் பூஷன் கூறிய கருத்தும், அணு உலைக்கு எதிராக மக்களைத் தூண்டி போராடிய உதயக்குமாரை ஆம் ஆத்மி கட்சி தேடி வந்ததும், இந்தக் கட்சி எந்த திசையில் செல்கிறது என்பதை யூகிக்க முடிகிறது. எனவே, ஆம் ஆத்மி கட்சியினர் மீது, இந்திய அரசு மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" ஞானதேசிகன் கூறியுள்ளார்.