

மதுரையில் உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் 1 லட்சம் நூல்கள் அடங்கிய மாபெரும் நூலகம் ரூ. 6 கோடியில் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது. போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இது வரப் பிரசாதமாக இருக்கும் என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமைக்குரிய மதுரையில், தமிழ் வளர்ச்சி, கல்வி தொடர்பாக சொல்லிக் கொள்ளும்படியான அமைப்புகளே இல்லாமல் இருந்தது. வள்ளல் பாண்டித்துரைத் தேவர் முயற்சியால், 1901-ம் ஆண்டு செப். 14-ம் தேதி (நான்காம்) தமிழ்ச்சங்கம் மலர்ந்தது. நாடு விடுதலைக்குப் பிறகு மதுரை மக்களுக்கென எத்தனையோ கல்வி நிறுவனங்கள் உருவானாலும், மாநிலம் முழுவதற்கும் பயன்படும் வகையிலான, மதுரையின் தனித்த அடையாளமாகத் திகழும் தமிழ், கல்வி சார்ந்த திட்டங்கள் எதுவும் வராமல் இருந்தது.
இந்த நிலையில், 1981-ல் நடந்த ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டின்போது, மதுரையில் உலகத் தமிழ்ச்சங்கம் கட்டப்படும் என்று அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் அறிவித்தார். சுமார் 33 ஆண்டுகளுக்குப் பிறகு, 4.12.14 அன்று கட்டுமானப் பணிகள் தொடங்கி, 2016-ல் அக்கட்டிடம் திறக்கப்பட்டது. தரைத்தளம் மற்றும் முதல் மாடியுடன் சேர்த்து மொத்தம் 80 ஆயிரம் சதுரடியில் கட்டப்பட்ட இந்த வளாகத்தில், நிர்வாக அலுவலகம், குளிரூட்டப்பட்ட கலையரங்கம், கணினி அரங்கம் போன்றவற்றுடன் மாபெரும் நூலகமும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தக் கட்டிடத்தில் சொல்லிக் கொள்ளும்படியான வசதிகள் ஏற்ப டுத்தப்படவில்லை. நூலகத்திலும் சில ஆயிரம் புத்தகங்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்ததால், அவை கேட்பாரற்று கிடந்தன.
இந்தச் சூழலில், அங்கு 1 லட்சம் புத்தகங்களுடன் மாபெரும் நூலகம் ரூ. 6 கோடி செலவில் அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் அறிவித்தார். அந்த நூலகத்திலேயே குழந்தைகளுக்கான தனிப்பிரிவு, போட்டித்தேர்வு பயிற்சி மையம், சுய நூல் வாசிப்பு பிரிவு ஆகிய வையும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து உலக தமிழ்ச் சங்க வட்டாரத்தில் விசாரித்தபோது, சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல, தென் தமிழகத்திலும் ஒரு நூலகம் தேவை என்று மக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அதனடிப்படையில், இந்த நூலகம் அமைக்கப்படுகிறது என்றனர். இந்த அறிவிப்பு மதுரை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து போட்டித் தேர்வு க்குத் தயாராகும் மதுரை விஸ்வநா தபுரத்தைச் சேர்ந்த எம்.விக்னேஷ் கூறுகையில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், உலகத் தரத்தில் பராமரிக்கப்படுகிறது. போட்டித் தேர்வுக்கான நூல்கள் பல்லாயிரக்கணக்கில் இருப் பதால், இளைஞர்கள் காலை 7 மணிக்கே நூலகத்துக்கு படையெடுக்கின்றனர். டோக்கன் பெற்றுவிட்டு நூலகம் திறக்கும் வரையில் காத்திருக்கும் அளவுக்கு அத்தனை வசதிகள் நூலகத்தில் இருக்கின்றன. வெளியில் இருந்து கொண்டுவரும் சொந்தப் புத்தகங்களை படிப்பதெற்கென்று குளிரூட்டப்பட்ட அறையும் உள்ளது.
நண்பனுடன் அங்கு சென்றிருந் தபோது, இதெல்லாம் மதுரைக்கு வராதா என்று ஏங்கினேன். காரணம், மதுரையில் போட்டித் தேர்விற்கு படிப்பவர்களுக்கு என்று தனியாக இடம் ஏதுமில்லை. மாநகராட்சி அலுவலக வளாகம், காந்தி மியூசியம் மற்றும் சிறுவர் பூங்காக்களில் மரத்தடியில் உட்கார்ந்து படிக்கிறோம். நல்ல புத்தகங்கள் வாங்க வசதியில்லாததால், ஒருவர் வாங்கிய புத்தகத்தையே நகல் எடுத்து பயன்படுத்துகிறோம். இனி நாங்களும் குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்ந்து படிக்கலாம் என்பதால், மகிழ்ச்சியாக உள்ளது. போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு மட்டுமின்றி மாணவர்கள், ஆய்வாளர்களுக்கும் மகிழ்ச்சி தருகிற அறிவிப்பு இது. கல்வித்துறை அமைச்சருக்கும், செயலாளர் உதயச்சந்திரனுக்கும் நன்றி” என்றார்.