

சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமான் செல்லும் வழியில் மாயமான விமானப் படை விமானத்தை கடலில், குறிப் பிட்ட 6 இடங்களில் தேடி வருகிறோம் என்று தேசிய கடல்சார் ஆராய்ச்சி மைய இயக்குநர் ஷெனோய் தெரி வித்துள்ளார்.
கடந்த ஜூலை 22-ம் தேதி தாம்பரத்தில் இருந்து அந்தமானில் உள்ள போர்ட் பிளேருக்கு விமானப் படையின் ஏ.என்.32 ரக விமானம் புறப்பட்டது. இதில் விமானிகள் உட்பட 29 பேர் பயணம் செய்தனர். அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ரேடாரில் இருந்து மறைந்தது. மாயமான விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுதொடர்பாக தேசிய கடல்சார் ஆராய்ச்சி மைய இயக்குநர் ஷெனோய் கூறிய தாவது:
எங்கள் ஆராய்ச்சி மையத் தைச் சேர்ந்த சாகர்நிதி, மத்திய புவியியல் ஆராய்ச்சி துறைக்கு சொந்தமான சமுத்திர ரத்னாகர் ஆகிய கப்பல்கள் மாயமான விமானத்தை தேடி வருகின்றன. சுமார் 25 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவில் எக்கோ சவுண்ட் தொழில்நுட்பம் மூலம் விமானத்தை தேடினோம். அதன் அடிப்படையில் தற்போது குறிப்பிட்ட 6 இடங்களில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கப்பல்களில் பொருத்தப் பட்டுள்ள, ஆழ்கடலில் தேடும் அதிநவீன கருவிகள் மூலம் கடலுக்கு அடியில் விமானத்தை தேடுகிறோம். அந்த கருவிகளில் அதிநவீன கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. தற்போ தைய தேடுதல் பணியை செப்டம்பர் 30-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.