மணல் வாங்குவதற்கு புது கட்டுப்பாடு- பொதுப்பணித்துறை அறிவிப்பு

மணல் வாங்குவதற்கு புது கட்டுப்பாடு- பொதுப்பணித்துறை அறிவிப்பு
Updated on
1 min read

காஞ்சிபுரத்தில் பொதுப்பணித்துறையிடம் மணல் வாங்க லாரி உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்று பொதுப்பணித்துறை அறிவித்து உள்ளது.

மணல் வாங்க அதிக அளவில் மணல் முகவர்கள் வருவதால், வரிசையில் பல நாள்களாக நிற்கும் லாரி உரிமையாளர்களுக்கு மணல் கிடைக்கவில்லை எனப் புகார் எழுந்தது. மேலும் லாரி உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரை மட்டுமே மணல் வாங்க அனுமதிக்க வேண்டும். மணல் முகவர்களை ஒழிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்த செய்தி தி இந்துவில் டிசம்பர் 11-ம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை முதல் லாரி உரிமை யாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் மட்டுமே மணல் வாங்க அனுமதிக்கப்படுவர் என்று பொதுப்பணித்துறை அறிவித் துள்ளது.

திருப்பி அனுப்பப்பட்ட மணல் முகவர்கள்

பொதுப்பணித்துறையின் உத்தரவையடுத்துக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவே, மணல் வாங்க குவியத் தொடங்கிய மணல் முகவர்களை போலீஸார் வெளியேற்றினர்.

இதற்கு மணல் முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர்ப் போலீஸார் புதிய விதிகளை விளக்கி, இனி மணல் முகவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று திட்டவட்டமாகத் தெரிவித்து, அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தனர்.

லாரி உரிமையாளர்கள் மற்றும் அவரது குடும்ப அட்டையில் இடம்பெற்றவர்களை மட்டுமே மணல் வாங்க போலீஸார் திங்கள்கிழமை அனுமதித்தனர். அவர்கள் அண்ணா காவல் அரங்கத்தில் வரிசையாக அமரவைக்கப்பட்டனர்.

இதனிடையே, போலீஸார் தங்களை இழிவாக நடத்துவதாகவும், வரிசையில் அமரச் சொல்கின்றனர். எழுந்து செல்லக்கூடாது என்கின்றனர். லத்தியை நீட்டிப் பேசுகின்றனர். எங்களுக்கு மரியாதையே இல்லை. கழிவறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in