குவியும் வெளிநாட்டுப் பறவைகளால் களைகட்டிய கோடியக்கரை சரணாலயம்

குவியும் வெளிநாட்டுப் பறவைகளால் களைகட்டிய கோடியக்கரை சரணாலயம்
Updated on
1 min read

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு ஏராளமான பறவைகள் வரத் தொடங்கியுள்ளதால் சரணாலயப் பகுதி களைகட்டியுள்ளது.

வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் வங்கக் கடலும், பாக். ஜலசந்தியும் இணைந்த கடற்கரைப் பகுதியையொட்டி அமைந்துள்ள சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வந்து தங்கிச் செல்லும். ரஷ்யா, ஈரான், இராக், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், சைபீரியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து 256 வகையான பறவைகள் இங்கு வந்துச் செல்கின்றன. சீசன் தொடங்குவதற்கு அறிகுறியாக கொசுஉல்லான் என்ற பறவை வரும். இந்தப் பறவை அக்டோபர் மாதத்தின் மத்தியில் சைபீரியாவில் இருந்து வரும். தொடர்ந்து மற்ற பறவைகள் வரும்.

தற்போது கொசுஉல்லான் வருகையைத் தொடர்ந்து, ஈரான், காஸ்பியன் பகுதியில் இருந்து பூநாரைகளும், இலங் கையில் இருந்து கடல் காகம், அன்டார்டிகா பகுதியில் இருந்து கடல் ஆலா, குஜராத்தில் இருந்து செங்கால்நாரை, கூழைக் கிடா உள்ளிட்ட பறவை இனங்களும் வந்துள்ளன. இவை தவிர, கரண்டிவாயான், நத்தை கொத்தி நாரை, ஊசிவால்சிறவி உள்ளிட்ட சுமார் 40 ஆயிரம் பறவைகள் வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தற்போது பறவைகளுக்கு இதமானச் சூழல் நிலவுவதால், இன்னும் சில நாட்களில் இங்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 6 முதல் 9 மணி வரையிலும், மாலை 4 முதல் 6.30 மணி வரையிலும் கோடியக்கரை பம்ப்ஹவுஸ், இரட்டைத் தீவு, கோவை தீவு, மரைக்கான் தீவு, கடற்கரைப் பகுதி, மணவாய்க் கால் பகுதிகளில் பறவைகள் நிறைந்திருக்கின்றன.

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தங்குமிடம், வழிகாட்டி, பைனாகுலர், வேன் உள்ளிட்ட வசதிகளை வனத் துறையினர் செய்துள்ளனர். எனினும், உணவு, குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in