

தமிழகம் - கர்நாடகம் இடை யிலான பேருந்துகள் சேவை நேற்று 4-வது நாளாக முடங் கியது. இதனால், தமிழக அரசுக்கு தினமும் ரூ.35 லட்சம் இழப்பு ஏற்படுகிறது
சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டன. பயணத்தை தவிர்க்க முடியாதவர்கள் ரயிலில் பயணம் செய்தனர். இதனால் பெங்களூரு செல்லும் ரயில்களில் வழக்கத்தைவிட அதிக கூட்டம் இருந்தது.
இது தொடர்பாக கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்த தால், பயணிகளின் பாதுகாப்பு கருதி நேற்று மாலை வரையில் 100 பேருந்துகள் இயக்கப் படவில்லை. கர்நாடகாவில் இயல்பு நிலை திரும்பிய பிறகே, பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும்’’ என்றார்.
அதிகாரி தகவல்
இது தொடர்பாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெங்களூருவுக்கு 500 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னையில் இருந்து மட்டுமே 145 விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கர்நாடகாவில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால், 4-வது நாளாக இன்றும் (நேற்று) ஓசூர் வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், தமிழக அரசுக்கு தினமும் ரூ.35 லட்சம் இழப்பு ஏற்படுகிறது’’ என்றனர்.