

சென்னை அருகே கடலில் கச்சா எண்ணெய் கசிந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இன்று பதில் அளிக்க வேண்டும் என்று புதுடெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அஷ்விணி குமார் என்பவர் புதுடெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த ஜனவரி 28-ம் தேதி, இந்தியன் ஆயில் நிறுவனத்துக்காக ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் எம்.வி.மேப்பிள் என்ற கப்பல், டான் காஞ்சிபுரம் என்ற கப்பல் மீது மோதியதில், டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கசிந்து கடலில் பரவியது. இதனால் சம்பவம் நடந்த பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, அங்கு வாழும் பொதுமக்களுக்கும் உடல் நலக்குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரு கப்பல் நிறுவனங்களிடம் இருந்து இழப்பீட்டுத் தொகை பெற வேண் டும். அதுவரை அந்த கப்பல் களை கைப்பற்றி வைக்க வேண் டும். மேலும் அப்பகுதியில் நடை பெறும் சீரமைப்பு பணிகளை கண்காணிக்க வல்லுநர் குழு அமைத்து, அங்கு ஏற்பட்ட சுற்றுச் சூழல் பாதிப்புகளை மதிப்பிட வேண்டும். இவ்வாறு மனுதாரர் கோரியிருந்தார்.
அதே அமர்வில், எண்ணெய் கசிவு தொடர்பாக மற்றொருவர் நேற்று தாக்கல் செய்த மனுவில், “இந்த பேரிடரை தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும் கடைபிடிக்கப்படும் முறைகள் மூலம் எதிர்கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு புதுடெல்லியில் உள்ள, தேசிய பசுமை தீர்ப்பாயத் தின் முதன்மை அமர்வில், தீர்ப் பாயத்தின் தலைவர் ஸ்வதந்த்ர குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச் சகம், மத்திய கப்பல் போக்கு வரத்துத் துறை, மத்திய மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங் கள், தமிழக அரசு தலைமைச் செயலர் ஆகியோர் நாளை (செவ்வாய்க்கிழமை) நேரில் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.