

தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கைக்கு, திருப்பூர் தொழில்துறையினர் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏ.சி.ஈஸ்வரன் (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம்-சைமா):
விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி, நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு, காவல்துறை, தீயணைப்புத்துறை மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு போன்ற நலத்திட்டங்களுக்கும், அனைத்து வகையான துறைகள் மேம்பாட்டுக்கும், குறிப்பாக குடிமராமத்துப் பணிகளுக்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியிருப்பதை வரவேற்கிறோம்.
எம்.பி.முத்துரத்தினம் (திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் -டீமா):
தமிழக அரசின் பட்ஜெட்டில் சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு, அவிநாசி-அத்திக்கடவு திட்டத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கியது, சாலை விரிவாக்கங்களுக்கு நிதி ஒதுக்கியது வரவேற்கத்தக்கது. பின்னலாடை துறைக்கென பிரத்யேக அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கே.எஸ்.பாபுஜி (தென்னிந்திய காலர் சர்ட் மற்றும் உள்ளாடை சிறு தொழில் முனைவோர் சங்கம் -சிஸ்மா):
தொழில்வளர்ச்சி, விவசாயம், வேலைவாய்ப்பு போன்ற பல அம்சங்களை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில் அலகுகள் செயலிழந்துள்ளதன் காரணங்களை ஆராய சிறப்புக்குழு அமைப்பது, காஞ்சிபுரம், கரூர் மாவட்டங்களில் ஜவுளிக் குழுமம் அமைப்பது, தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.1010 கோடி, குறைந்த வட்டியில் தொழில் தொடங்க ரூ.1950 கோடி ஒதுக்கீடு, தொழில்நுட்பத்துறைக்கு ரூ.116 கோடி, திருப்பூர் சிறு,குறு மற்றும் நடுத்தர பின்னலாடை நிறுவனங்கள் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.
ராஜா எம்.சண்முகம் (திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் -டீ):
தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.2000 கோடி ஒதுக்கியது, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டுக்கு ரூ.532 கோடி ஒதுக்கீடு, தொழிலாளர் திறன் மேம்பாட்டுக்கு ரூ.150 கோடி ஒதுக்கியது வரவேற்புக்குரிய விஷயங்களாகும். தொழில் தொடங்குவதற்கான ஒற்றைச் சாளர முறையை வலுப்படுத்த உதவும் விஷயங்கள் பட்ஜெட்டில் உள்ளன. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மூலதன மானியம் ரூ.80 கோடியில் இருந்து ரூ.160 கோடியாக உயர்த்தியுள்ளதை வரவேற்கிறோம். இது திருப்பூரில் 80 சதவீதம் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மிகவும் பயன் அளிக்கும்.