தண்ணீர் இல்லாமல் கால்நடைகள் இறக்கும் அபாயம்: சத்துகளை உட்கிரகித்தல், கழிவுப் பொருட்களை வெளியேற்றுதலிலும் பாதிப்பு

தண்ணீர் இல்லாமல் கால்நடைகள் இறக்கும் அபாயம்: சத்துகளை உட்கிரகித்தல், கழிவுப் பொருட்களை வெளியேற்றுதலிலும் பாதிப்பு
Updated on
2 min read

கால்நடைகளுக்கு குடிநீரும் ஒரு உணவுதான். ஒரு உயிரினம் தனது உடலில் உள்ள எல்லா கொழுப்புச் சத்தையும் இழந்தால்கூட உயிர் வாழலாம். ஆனால், அதன் உடலில் உள்ள நீரில் 10 சதவீதம் குறைந்தால் கூட செரிமானக் கோளாறும், 20 சதவீதம் குறைந்தால் உயிரிழக்கவும் நேரிடலாம். தற்போது வறட்சியால் தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் வறண்டு விட்டன. வீடுகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள், விவசாயக் கிணறுகளில் கூட தண்ணீர் இல்லை.

விவசாயம் செய்யாமல் விளை நிலங்கள் வானம் பார்த்த பூமியாக இருக்கின்றன. கால்நடைகளுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவு குறைந்து தண்ணீர் பற்றாக்குறையால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கால்நடைகளின் உடம்பில் பல உறுப்புகள் இயங்குவதால், அதன் மூலம் ஏற்படும் கழிவுப் பொருட்கள் தோல், சிறுநீரகம், நுரையீரல் வழியாக நீரின் வடிவத்திலேயே வெளியேறுகின்றன. இதன் காரணமாக கால்நடைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அதன் உடலில் வெப்பநிலை சீராக இருக்க தண்ணீர் அவசியம்.

இதுகுறித்து முன்னாள் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் (ஓய்வு) வி. ராஜேந்திரன் கூறியதாவது:

கால்நடைகளின் எடையில் 70 சதவீதம் தண்ணீரும், பாலில் 80 சதவீதம் தண்ணீரும் முக்கிய பகுதிப்பொருட்களாக உள்ளன. உள்ளுறுப்புகள் மற்றும் வெளி உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ள கால்நடைகளுக்கு தண்ணீர் உதவுகிறது. உணவை அசைப் போடவும், இரையை விழுங்கவும் நீர் தேவை. செரிக்கப்பட்ட உணவு குடல் சுவர்களை கடந்து ரத்தத்தில் சேர உதவுவதும் தண்ணீரே. ரத்தத்தின் பெரும் பகுதியும் நீர்தான். கால்நடைகளின் தண்ணீர் தேவையை எந்த நேரத்திலும் பூர்த்தி செய்ய வேண்டும்.

தண்ணீரின் மூலமும், தொண்டை அடைப்பான், சப்பை நோய், ஆகிய தொற்று நோய்க் கிருமிகள் பரவுவதால் சுத்தமான, தண்ணீர் கால்நடைகளுக்குத் தேவை. கால்நடைகளின் தண்ணீர் தேவை நாம் கொடுக்கும் தீவனங்கள் மூலமும், தானாக அவை அருந்துவதன் மூலமும், ஒரு சிறு பகுதி திசுக்களின் ஆக்ஸிகரன விளைவாலும் பூர்த்தி செய்யப்படுகிறது.

தண்ணீர் குடிக்கும் அளவு குறையும்போது செரிமானத் தன்மை சத்துகளை உட்கிரகித்தல், கழிவுப் பொருட்களை வெளியேற்றுதல் போன்ற செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இது நீண்ட நாட்களுக்கு தொடர்ந்தால் ரத்தத்தில் திரவ நிலை மாறுபடும். அதனால், மலச் சிக்கல், காய்ச்சல் போன்ற உடல்நலக் குறைவு ஏற்படலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒரு நாளைக்கு 30 லிட்டர் தேவை

கறவைப் பசுக்களுக்கும், எருமைகளுக்கும் ஒரு நாளைக்கு 30 லிட்டர் வரை தண்ணீர் தேவை. இதுதவிர அரை கிலோ பால் உற்பத்திக்கு கூடுதலாக ஒரு லிட்டர் தண்ணீர் வேண்டும். தற்போது கோடை காலமாக இருப்பதால் பொதுவாக கறவை மாடுகளுக்கு நான்கு அல்லது ஐந்து முறை தண்ணீர் கொடுப்பது இன்றியமையாதது. வெளி வெப்பநிலையை பொறுத்து, கறவை பசுக்களின் தண்ணீர் தேவை மாறுபடும். கறவைப் பசுக்கள் தங்கள் தண்ணீர் தேவையில் மூன்றில் இரண்டு பங்கினை பகல் நேரத்திலும், மீதிப் பங்கினை இரவு நேரத்திலும் பூர்த்தி செய்கின்றன. வாளிகள் அல்லது பாத்திரங்கள், தொட்டிகளில் கால்நடைகள் தண்ணீர் குடிக்கும்போது போதுமான நேரம் அவைகளை அனுமதிக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in