

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது மக்கள் நம்பிக்கையிழந்து விட்ட நிலையில், அவற்றுக்கு விடை கொடுத்து விட்டு, இனிவரும் தேர்தல்களில் வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாகவும், இனிவரும் தேர்தல்களில் வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் 16 அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இக்கோரிக்கை பற்றி விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்க மாற்றமாகும்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எந்த காலத்திலும் நம்பிக்கைக்குரியவையாக இருந்ததில்லை. தேர்தலில் தாங்கள் அளித்த வாக்கு யாருக்கு பதிவாகியுள்ளது என்பதை அறியும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இது சாத்தியமில்லை. வாக்குச்சீட்டுகளில் மட்டுமே எந்த சின்னத்தில் வாக்களித்தோம் என்பதை வாக்காளர்களால் அறிந்து கொள்ள முடியும்.
2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் ஐயமளிப்பதாக பாமக குற்றம் சாட்டியது. அத்துடன் ஒதுங்கிவிடாமல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைக் கொண்டு நடத்தப்பட்ட தேர்தல் முடிவுகளை செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக வழக்கு தொடர்ந்தது. அதுமட்டுமின்றி, உயர் நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றியமைத்து ஒரு கட்சிக்கு ஆதரவாக வாக்குகளை பதிவு செய்ய வைக்க முடியும் என்பதை தேர்தல் ஆணையத்தில் அதன் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் 27.08.2009 அன்று நிரூபித்துக் காட்டினோம். பாமக சார்பில் ஹரிபிரசாத், ராவ் ஆகிய இரு வல்லுநர்கள் இதற்கான செயல் விளக்கத்தை செய்து காட்டினார்கள். இதை தேர்தல் ஆணையத்தால் திருப்தியளிக்கும் வகையில் மறுக்கமுடியவில்லை.
அதற்கு முன்பாக 10.08.2009 அன்று சென்னையில் ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் அதிகாரி டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, தேர்தல் வல்லுநர்கள் மற்றும் செய்தியாளர்கள் முன்னிலையில் இதே செயல்விளக்கத்தை பாமக செய்து காட்டியது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற அந்த செயல்விளக்கம் தவறு என்று டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியால் மறுக்க முடியவில்லை. மாறாக இதிலுள்ள தொழில்நுட்ப விவரங்கள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் தான் சொல்ல வேண்டும் என்று கூறி வேறு கருத்துக் கூற மறுத்துவிட்டார். அப்போதிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பயன்பாட்டுக்கு எதிராக போராடி வரும் பாமக, இதில் பிற கட்சிகளும் இணைய வேண்டும்; இதை ஓரு கூட்டு இயக்கமாக நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தது.
அதன் பயனாக இப்போது தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என்று 18 அமைப்புகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எதிராக ஒன்று திரண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 2009-ஆம் ஆண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நம்பகமானவை அல்ல என்று பாமக குற்றம் சாட்டிய போது, அதை ஏற்க மறுத்து கிண்டல் செய்த திமுகவும், காங்கிரஸ் கட்சியும் இப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பது பாமகவுக்கு கிடைத்த வெற்றியாகும்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பாக 2009-ம் ஆண்டில் பாமக முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் இப்போதும் அப்படியே உள்ளன. அண்மையில் மத்தியப் பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் ஒரு வாக்குச் சாவடியில் அனைத்து வாக்குகளும் பாரதிய ஜனதாக் கட்சிக்கே பதிவானது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்த ஐயங்களை உறுதி செய்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை இரு முறை டெல்லியில் சந்தித்த நான் பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படி வலியுறுத்தியதுடன், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டுகளை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திரமோடி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்களையும் இதுதொடர்பாக சந்தித்து பேசினேன். அவர்கள் அனைவருமே மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டுகளை பயன்படுத்துவதற்கு முழு ஆதரவு தெரிவித்தனர்.
உலகில் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளில் கூட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. உலகில் தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வழக்கம் உள்ள 118 நாடுகளில் இந்தியா, பிரேசில், வெனிசுலா ஆகிய 3 நாடுகளில் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முழுமையாக பயன்படுத்தப்படுகின்றன.
நெதர்லாந்து, ஜெர்மனி, பராகுவே ஆகிய நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திர முறையை கைவிட்டு, மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கே மாறியிருக்கின்றன. மேலும் 9 நாடுகளும் வாக்குப்பதிவு எந்திரங்களை கைவிட தீர்மானித்துள்ளன. இத்தகைய சூழலில் இந்தியா மட்டும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை விடாமல் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்க அவை ஒன்றும் அவ்வளவு புனிதமானவை அல்ல.
மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் புனிதமான செயலாகும். அதற்கான நடைமுறை எள்ளின் முனையளவுக்குக் கூட ஐயமற்றதாக இருக்க வேண்டும். ஆனால், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது மக்கள் நம்பிக்கையிழந்து விட்ட நிலையில், அவற்றுக்கு விடை கொடுத்து விட்டு, இனிவரும் தேர்தல்களில் வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.