

சென்னை பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் எம்பி தருண் விஜய் பங்கேற்றதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
சென்னை பல்கலைக்கழக நிர்வாகவியல் துறை சார்பில் “இந்தியாவில் உருவாக்குவோம்” (மேக் இன் இந்தியா) திட்டம் தொடர்பான கருத்தரங்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பாஜக முன்னாள் எம்பி தருண் விஜய் கலந்துகொண்டு “டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா - பொருளாதார வளர்ச்சி வாயிலாக தேசிய ஒற்றுமையில் மாணவர்களின் பங்கு”என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். இந்த நிகழ்ச்சி நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது.
இந்த நிலையில், பாஜக முன்னாள் எம்பி பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு பல்கலைக்கழக மாணவர் அமைப்பைச் சேர்ந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் 25 பேர் பாஜக அரசு பல்கலைக்கழகங்களை காவிமயமாக்கி வருவதாகவும், அந்த கட்சியைச் சேர்ந்த எம்பி பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்றும் கூறி பல்கலைக்கழக வளாகத் தில் தரையில் அமர்ந்து கோஷமிட்டனர். ஏற்கெனவே முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸார் அந்த மாணவர்களை கைது செய்தனர்.
பாஜக முன்னாள் எம்.பி.க்கு எதிர்ப்பு தெரிவித்தது குறித்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் நிருபர்களிடம் கூறும்போது, “மத்தியில் உள்ள பாஜக அரசு, பல்கலைக்கழகங்களை காவிமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. வரலாற்றுக்கு மாறான விஷயங்களை பாடப் புத்தகத்தில் திணித்து வருகிறது. கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிராக மருத்துவப்படிப்பில் ‘நீட்’ நுழைவுத் தேர்வை கொண்டுவந்துள்ளது. பாஜகவின் கொள்கைகளை மென்மையான முறையில் பேசி வருபவர்தான் தருண் விஜய்.
எனவே, அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்” என்று தெரிவித்தனர்.