

பிரதமர் மன்மோகன் சிங்கின் ரஷ்ய பயணத்தின்போது, கூடங்குளத்தில் 3, 4-வது அணு உலைகள் நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாவது சாத்தியமில்லை எனத் தெரிகிறது.
கூடங்குளம் அணு உலை விவகாரத்தில், 'அணு உலை விபத்து இழப்பீடு' அம்சம் நீங்கலாக அனைத்து விவகாரங்களுக்கும் தீர்வு ஏற்பட்டுள்ளதாகவும், இழப்பீடு விஷயத்தில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தொடர்ந்து பேசி வருவதாகவும் அரசு வட்டாரத்தை மேற்கோள்காட்டி பி.டி.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அணு உலை விபத்து இழப்பீடு விஷயத்தில் தீர்வு ஏற்பட்டாலும்கூட, இது வர்த்தக ரீதியிலான ஒப்பந்தம் என்பதால், பிரதமரின் இந்தப் பயணத்தின்போது கையெழுத்தாக வாய்ப்பு இல்லை என்று அரசு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
முன்னதாக, ரஷியா மற்றும் சீனாவுக்கு 5 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியிலிருந்து புறப்பட்டுச் செல்வதற்கு முன்பு, பிரதமர் மன்மோகன் சிங் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தனது சுற்றுப் பயணம் தொடர்பாக வெளியிட்ட அந்த விரிவான அறிக்கையில், கூடங்குளம் அணு உலைகள் ஒப்பந்தம் தொடர்பாக எதுவும் இடம்பெறவில்லை என்பதும் கவனத்துக்குரியது.
இந்தியா தீவிரம்
கூடங்குளத்தில் 3-வது மற்றும் 4-வது அணு உலைகளை நிறுவுவதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவின் அணு சக்தி சட்டத்தில் உள்ள அணு உலை விபத்து இழப்பீடு பிரிவு விஷயத்தில் ரஷியா கவலை கொண்டுள்ளது. அதற்காக அந்த நாட்டை சமாதானப்படுத்தும் விதத்தில் விபத்தால் ஏற்படும் சேதத்துக்கு காப்பீடு எடுப்பது போன்ற யோசனைகளை புது டெல்லி முன்வைத்துள்ளது.
அணு உலை சாதனங்களை விநியோகிக்கும் வெளிநாட்டு மற்றும் இந்திய நிறுவனங்கள் விபத்து ஏற்பட்டால் சுமக்கவேண்டிய இழப்பீடு அளவு பற்றி இந்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணு மின் திட்டம் தொடர்பான ஆரம்ப திட்டம் அரசுகள் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் ஏற்பட்டதால் கூடங்குளம் 3 மற்றும் 4வது உத்தேச பிரிவுகளுக்கான அணு உலைகளுடன் விபத்து இழப்பீடு சட்டத்தை தொடர்புப்படுத்திடுவதை ரஷியா எதிர்க்கிறது.
விபத்து ஏற்பட்டால் அணு உலைகள் மற்றும் சாதனங்கள் விநியோகிப்பாளர்கள் ஏற்க வேண்டிய சேத அளவு, மற்றும் இழப்பீடு அளவை அணுசக்தித் துறையுடன் இணைந்து மதிப்பிடும் வேலை ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்போரேஷன் வசம் இந்தியா ஒப்படைத்துள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் ரஷ்யப் பயணத்தின்போது, கூடங்குளம் அணு உலை தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து, ரஷ்ய செய்தியாளர்களிடம் பேசும்போது, ஒப்பந்தம் கையெழுத்தாகும் என பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.