Published : 13 Feb 2017 09:49 AM
Last Updated : 13 Feb 2017 09:49 AM

பிப்.13-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

நிகழ்நேரப் பதிவு நிறைவு

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக இருக்கும் அஇஅதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டிருக்கிறது. வி.கே.சசிகலா தலைமையில் ஓரணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஓரணியாகவும் அதிமுகவினர் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்த, எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

அதிமுக உட்கட்சி குழப்பம் உக்கிரமடைந்து ஒரு வாரம் ஆன நிலையில், இன்றும் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்துவருகின்றன. அவற்றின் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை > ரெஃப்ரஷ் செய்க)

8.45 pm ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு எம்.பி, எம்.எல்.ஏ. ஆதரவு

ஓ.பன்னீர்செல்வத்துக்கு மதுரை எம்.பி. கோபாலகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து மதுரை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தரும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 8 ஆகவும், எம்.பிக்களின் எண்ணிக்கை 12 ஆகவும் உயர்ந்துள்ளது.

எம்.எல்.ஏ சரவணன் பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு நேரில் வந்து தன் ஆதரவை தெரிவித்துப் பேசுகையில், ''கூவத்தூர் விடுதியில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்தேன். அங்குள்ள எம்.எல்.ஏக்கள் மன உளைச்சலில் உள்ளனர். மேலும் பல எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு விரைவில் வருவார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடைபெற்றால் பெரும்பான்மை அடிப்படையில் ஓபிஎஸ்தான் முதல்வர் ஆவார்'' என்றார்.

8.15 pm: அதிமுக தொண்டர்களின் வேகத்தை யாரும் கணக்கிட முடியாது. அது புயல் மாதிரி இருக்கும் என்றார் சசிகலா. அதன் விவரம்: >வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கவே கூவத்தூரில் தங்க வந்தேன்: சசிகலா

8 pm: வன்முறையைத் தடுக்க தமிழகம் முழுவதும் 750 ரவுடிகள் கைது

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையை தொடர்ந்து வன்முறை சம்பவங்களை தடுக்க ரவுடிகளை கைது செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், சசிகலா ஆதரவாளர்களும் வன்முறையில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக போலீஸாருக்கு தகவல்கள் வந்தன. சசிகலா தரப்பினர் வன்முறையை தூண்டிவிட திட்டமிட்டு இருப்பதாகவும் உளவுப் பிரிவு போலீஸார் எச்சரித்தனர்.இதனால் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வன்முறை சம்பவங்களை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் ரவுடிகளை கைது செய்யும் பணியில் போலீஸார் இறங்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் சுமார் 750 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

7.30 pm ''கூவத்தூருக்கும், கிரீன்வேஸ் சாலைக்கும் இடையிலான பதவிச்சண்டையில் அனைத்துத்தரப்பு தமிழக மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்'' என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அதன் விவரம் >அரசியலைப் பொறுத்தவரையில் அதிமுக எங்களுக்கு எதிரிதான்: ஸ்டாலின்

6.55 pm: மறைந்த தமிழக முன்னாள் முத‌ல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை (செவ்வாய்க்கிழமை - பிப்.14) தீர்ப்பை அறிவிக்கிறது. காலை 10.30 மணிக்கு தீர்ப்பு என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1991- 96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.6 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, 2014 செப்டம்பர் 27-ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

இதை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த க‌ர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, 2015 மே 11-ம் தேதி நால்வரும் நிரபராதிகள் என விடுவித்தார். இதை எதிர்த்து கர்நாடக அரசு, சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் புகார்தாரரான சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 6 மாதங்களுக்கு மேலாக இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கிறது.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும், தற்காலிக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் வலுத்துள்ள நிலையில் இந்த தீர்ப்பு வெளியாக உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

6.25 pm: தமிழக அரசின் உளவுத்துறை தலைவராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் விவரம்: >உளவுத்துறை தலைவராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்

5.18 pm: தமிழக சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்ட ஆளுநருக்கு முகுல் ரோஹத்கி யோசனை

தமிழக சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்ட ஆளுநருக்கு, அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி யோசனை தெரிவித்துள்ளார். ஆளுநர் கேட்டதன் பேரில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டமே பெரும்பான்மையை நிரூபிக்க ஒரே வழியாக இருக்கும் என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கூறியுள்ளார்.

5.11 pm: பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கிடையே திமுகவின் உயர்நிலைக் குழு கூட்டம், கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் தொடங்கியது. முன்னதாக ஸ்டாலின், ''திமுகவின் நிலைப்பாடு குறித்து கட்சித் தலைவர் கருணாநிதியும், பொதுச் செயலாளர் அன்பழகனும் முடிவெடுப்பார்கள்'' எனத் தெரிவித்திருந்தார்.

4.59 pm: கூவத்தூர் செல்லும் சசிகலாவுடன் தமிழ் செய்தி தொலைக்காட்சிகளின் செய்தியாளர்கள் சிலர் அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில் குறிப்பிட்ட 5 சேனல்களின் செய்தியாளர்கள் சொகுசு விடுதிக்குள் அழைத்துச் செல்லப்படுவார்கள் எனத் தெரிகிறது.

4.48 pm: 'தமிழக அரசியல் சூதாட்டத்தில், ஆளுநர் மத்திய அரசின் பொம்மையாகச் செயல்படுகிறார்' என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி குற்றம் சாட்டியுள்ளார்.

4.29 pm: 'தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பம் அதிமுகவின் உள்கட்சி விவகாரம். இதில் மத்திய அரசு தலையிட எந்த உரிமையும் இல்லை. அதிமுக எம்எல்ஏக்களும், அக்கட்சியுமே குழப்பத்தை தீர்க்க முடியும்' என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். அதன் விவரம்: >தமிழக உள் விவகாரங்களில் மத்திய அரசு தலையிடாது: கிரண் ரிஜிஜு

4.06 pm:விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க 3-வது நாளாக கூவத்தூர் செல்கிறார் சசிகலா.

3.57 pm: 'தமிழக அரசியல் சூழ்நிலை துரதிர்ஷ்டவசமானது. ஆளுநர் ஒவ்வொரு கட்சியின் கருத்துகளுக்கும் தனித்தனியாக பதிலளிக்க முடியாது, விரைவில் அவர் நல்ல முடிவெடுப்பார்' என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

3.34 pm: 'பெரும்பான்மையை நிரூபிக்க ஓபிஎஸ்ஸுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். தமிழக ஆளுநர் விரைவாகவும், கவனத்துடனும் தனது முடிவைத் தெரிவிக்கவேண்டும்' என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

3.19 pm: 'விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட, மாநிலத்தில் உடனடியாகத் தீர்க்கவேண்டிய பிரச்சினைகள் உள்ளன. ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம்' என்று அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.

3.05 pm: முதல்வர் பதவி குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதற்கான காரணத்தை, ஆளுநர் தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். | முழு விவரம் > > முடிவெடுக்க தாமதம் ஏன்?- ஆளுநருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி

2.53 pm: தமிழக அரசியல் சூழலால், அரசின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இருக்காது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

2.20 pm: அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் விடுதிக்கு, தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சென்றுள்ளது.



2.05 pm: 'அதிமுகவுக்கு விசுவாசமாக இல்லாதவர் என்பதை பன்னீர்செல்வம் நிரூபித்துவிட்டார். நன்றி இல்லாமல் அதிமுகவை பிரித்தாள நினைக்கிறார். அதிமுகவின் 1.5 கோடி தொண்டர்களை பன்னீர்செல்வத்தால் ஒன்றும் செய்ய முடியாது' என அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா கூறியுள்ளார். | முழு விவரம் > > முதல்வராக முடிவு செய்தது ஏன்?- சசிகலா விளக்கம்

'ஆயிரம் பன்னீர்செல்வங்களை பார்த்துவிட்டோம்; எங்களின் அமைதிப் போராட்டம் வெற்றி பெறும், அதிமுக ஆட்சியை அமைக்கும்' என அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். அதன் விவரம்: >ஆயிரம் பன்னீர்செல்வங்களை பார்த்துவிட்டோம்: சசிகலாவின் 10 அம்ச பேச்சு

அதிமுக எம்எல்ஏக்களுடன் உரையாடும் சசிகலா.

1.45 pm: ஆட்சி அமைக்க அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு அழைப்பு விடுக்குமாறு தமிழக பொறுப்பு ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏ.எல்.சர்மா என்பவரால் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.36 pm: எம்எல்ஏக்களை மீட்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

1.12 pm: தலைமைச் செயலகம் வந்தடைந்தார் தமிழக முதல்வர் ஓபிஎஸ்.

12.53 pm: கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து, முதல்வர் ஓபிஎஸ் தலைமைச் செயலகம் புறப்பட்டார். அவருடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜனும் செல்கிறார்.

12.41 pm: முதல்வர் ஓபிஎஸ் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திய பிறகு, எண்ணூர் கே.வி.கே. குப்பத்தில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தைப் பார்வையிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12.30 pm: எம்எல்ஏக்களை மீட்கக் கோரி அவர்களின் உறவினர்கள் தாக்கல் செய்த மனுவில், காஞ்சிபுரம் காவல்துறையின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

12.21 pm: எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடப்பதாக, அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

12.07 pm: சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்துக்கு வந்துள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமைச் செயலகம் வருகை. படம்: எல்.சீனிவாசன்

11.59 am: வி.கே. சசிகலாவை முதல்வராக அழைக்க, ஆளுநர் காலம் எடுத்துக் கொண்டதில் எந்த உள் நோக்கமும் இல்லை என்றும், தமிழக ஆளுநரின் முடிவுக்கு பின்னணியில் யாரும் இல்லை எனவும் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். | முழு விவரம் > > தமிழக ஆளுநர் செயல்பாட்டில் எந்த உள்நோக்கமும் இல்லை: வெங்கய்ய நாயுடு

11.51 am: 'சசிகலாவுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. இதைத் தொடர்ந்து அவர் ஆட்சியமைக்க ஆளுநர் இன்று அழைப்பார் என்று எதிர்பார்க்கிறோம். ஆளுநரின் தாமதத்துக்குப் பின்னால் திமுகவும், பாஜகவும் உள்ளன' என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளார். | முழு விவரம் > >இன்று மாலைக்குள் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார்: வைகைச் செல்வன் நம்பிக்கை

11.40 am: "தமிழக அரசியலில் மத்திய பாஜக தலையிட்டு வருகிறது. ஆளுநர் சட்டப்படி முடிவெடுக்க வேண்டும். அவர் சுதந்திரமாக செயல்பட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். நான் சசிகலாவையும் ஆதரிக்கவில்லை; பன்னீர்செல்வத்தையும் ஆதரிக்கவில்லை" என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

11.35 am: மூன்றாவது நாளாக இன்றும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, கூவத்தூர் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

11.29 am: அதிமுக அவைத் தலைவர் செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் போயஸ் கார்டன் வந்துள்ளனர்.

11.13 am: 'உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்காக ஆளுநர் காத்திருப்பது நியாயமானது' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

11.00 am: கூவத்தூரில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை மீட்கக்கோரிய டிராபிக் ராமசாமியின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

10.45 am: ஓபிஎஸ் குறித்துப் பேசியது தவறு என்று ஒப்புக்கொண்ட பிறகும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது, அரசியல் பழிவாங்கும் நோக்கமுடையது என்று முன்னாள் எம்எல்ஏ கலைராஜன் கூறியுள்ளார்.

10.23 am: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தலைமைச் செயலகத்துக்கு வருவார் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன், காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

( தலைமைச் செயலகம் வந்த டிஜிபி ராஜேந்திரன் (இடது) மற்றும் சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் (வலது). | படங்கள்: எல்.சீனிவாசன் )

10.15 am: முதல்வர் ஓபிஎஸ்ஸுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.பி. கலைராஜன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

10.00 am: அதிமுக கூட்டணியில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, யாரை ஆதரிப்பது என வாக்குப்பெட்டி வைத்து மக்கள் கருத்தைக் கேட்க முடிவு செய்துள்ளார். நாகப்பட்டினத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் வாக்குப் பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கருத்துகள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. | முழு விவரம் > > மஜக எம்எல்ஏ யாருக்கு ஆதரவு? - வாக்குப் பெட்டி வைத்து கருத்து கேட்க முடிவு

9.45 am: ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சார்பில் அதிமுக எம்.பி. மைத்ரேயன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துப் பேசிய நிலையில் இன்று (திங்கள்கிழமை) சசிகலா தரப்பு ஆளுநரை சந்திக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

9.40 am: ஒரு வாரத்துக்குப் பிறகு இன்று (திங்கள்கிழமை) மதியம் 12.10 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகம் செல்கிறார்.

முதல்வர் ஓபிஎஸ் தலைமைச் செயலகம் வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம். படம்: ம.பிரபு

9.30 am: கூவத்தூரில் போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதால், தனியார் விடுதி வெறிச்சோடிக் கிடக்கிறது.

நிகழ்வுகள் இதுவரை:

கடந்த 5-ம் தேதி (பிப்.5) அதிமுக சட்டமன்றக் குழு கூட்டப்பட்டது. அதில் வி.கே.சசிகலா சட்டமன்றக்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். வி.கே.சசிகலா முதல்வராக வேண்டும் என அவரை முன்மொழிந்தார். அன்றைய தினமே ராஜினாமாக் கடிதத்தையும், ஆளுநருக்கு அனுப்பிவைத்தார். சசிகலாவும் ஆட்சியமைக்க உரிமை கோரி, எம்எல்ஏக்கள் ஆதரவுக் கடிதத்தையும் இணைத்து ஆளுநருக்கு அனுப்பினார்.

ஒரு பக்கம் சசிகலா பதவியேற்புக்கான ஏற்பாடுகள் அரங்கேறி வர, யாரும் எதிர்பாராமல் ஓபிஎஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கடந்த 7-ம் தேதி, ஜெ. நினைவிடத்தில் 40 நிமிட தியானத்துக்குப் பிறகு அவர், சசிகலா தரப்பு தன்னை வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைத்தது என்ற அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் சசிகலா குடும்பத்தினர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஓபிஎஸ்ஸின் புகார்கள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

அடுத்த நாளே (பிப்.8-ம் தேதி) ஓபிஎஸ் கட்சிப் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அன்றைய தினம் மீண்டும் அதிமுக சட்டமன்றக்குழு கூட்டப்பட்டது. ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக அதிமுக சட்டமன்றக்குழு கூட்டப்பட்டது தமிழக அரசியலில் கவனம் ஈர்த்தது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு, சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூவத்தூரில், ஒரு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே அதிமுக எம்எல்ஏக்கள் ஆறுக்குட்டி, மனோரஞ்சிதம், மனோகரன் உள்ளிட்டோர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதிமுக எம்பி மைத்ரேயன் ஆரம்பம் முதலே ஓபிஎஸ் பக்கம் நின்றார். இந்நிலையில் 9-ம் தேதி மாலை 5 மணியளவில் ஓ.பன்னீர்செல்வமும் 7.30 மணியளவில் வி.கே.சசிகலாவும் ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்தனர். சசிகலா ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார். இதுவரை ஆளுநர் மாளிகையில் இருந்து சசிகலாவுக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை.இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 6-ஆகவும், எம்பிக்களின் எண்ணிக்கை 11 ஆகவும் அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x