

குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை மேல் வரி இன்றி சென்னை குடிநீர் வாரியத்துக்கு செலுத்த செப்டம்பர் 30-ம் தேதி கடைசி நாள் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வாரியத்துடன் இணைக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி மற்றும் கட்டணத்தை செலுத்த வேண்டும். குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு இல்லாதவர்களும் வரி செலுத்த கடமைப்பட்டவர்களாவர்.
வரி மற்றும் கட்டணங்களை சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பணிமனை வசூல் மையங்கள் அல்லது www.Chennaimetrowater.tn.nic.in என்ற இணையதளம் மூலமாக செலுத்தலாம்.
மேல் வரி 1.25%
வசூல் மையங்கள் செப்டம்பர் 18 மற்றும் 25-ம் தேதிகளான ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கும். காலதாமதமாக செலுத்தப்படும் கட்டணங்களுக்கு மேல் வரி மாதம் 1.25 சதவீதம் செலுத்த நேரிடும்.
நிலுவைத் தொகையை செலுத்த தவறினால் சென்னை குடிநீர் வாரியம், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேல் வரி இன்றி வரி மற்றும் கட்டணங்களை செலுத்த செப்டம்பர் 30-ம் தேதி கடைசி நாள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.