

7 தமிழர்களின் விடுதலைக்கு ஒரே வழி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவை பயன்படுத்துவது தான். இதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு நிலையில், மத்திய அரசிடம் முறையிடுவது தேவையற்றது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் கைது செய்யப் பட்டு வரும் 11-ம் தேதியுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவருடன் சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 6 பேரும் 25 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர்.
ராஜீவ் கொலை வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களுக்கும் தொடக்கத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் தண்டனை வெவ்வேறு காலகட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. வழக்கமாக ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் மட்டுமே. ஆயுள் தண்டனை பெற்றவர்கள் நன்னடத்தை என்ற பெயரில் 10 ஆண்டுகளிலும், சில நேரங்களில் 7 ஆண்டுகளிலும் விடுதலை பெறுவது வழக்கமாக உள்ளது. ஆனால், 7 தமிழரும் 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மத்திய - மாநில அரசுகளின் அரசியல் சித்து விளையாட்டுக்கள் காரணமாக அவர்களின் விடுதலைக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடப்படுகிறது.
அரசியல் ரீதியாக லாபம் தேவைப்படும் நேரங்களில் இவர்களின் விடுதலை குறித்து பேசுவதையும், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ள தமிழக அரசு, அதன்பின்னர் இச்சிக்கலைக் கிடப்பில் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் 7 தமிழர்கள் விடுதலைக்கு ஒப்புக்கொள்ளப் போவதில்லை. 7 தமிழர்களின் விடுதலைக்கு ஒரே வழி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவை பயன்படுத்துவது தான். இதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு நிலையில், மத்திய அரசிடம் முறையிடுவது தேவையற்றது.
முதல்வர் ஜெயலலிதா நினைத்தால் அமைச்சரவைக் கூட்டத்தை இந்த நிமிடமே கூட்டி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்யும்படி ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். 7 தமிழர்களும் அடுத்த 24 மணி நேரத்தில் விடுதலையாகி சுதந்திரக் காற்றை சுவாசிக்க வாய்ப்பிருக்கிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஜூன் 11-ம் தேதி வேலூர் சிறையிலிருந்து கோட்டை நோக்கி நடத்தப்படும் பேரணியில் மனிதநேயமுள்ள அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.