Published : 06 Dec 2013 09:04 AM
Last Updated : 06 Dec 2013 09:04 AM

நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி சேருமா திமுக?- ஏற்காடு இடைத்தேர்தல் முடிவுக்குப் பின் பேச்சு நடத்த திட்டம்

ஏற்காடு இடைத் தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வரவுள்ள நிலையில், அடுத்த கட்டமாக கூட்டணியை முடிவு செய்யும் பணிகளைத் திமுக தொடங்க உள்ளது. இந்த முறை தேமுதிகவுடன் கூட்டணி சேர திமுக தலைமை விரும்புவதாகவும், இடைத் தேர்தல் முடிவுக்குப் பின் பேச்சுகள் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்காடு இடைத் தேர்தல் கூட்டணி அமைக்கும் முன்னோட்ட நிகழ்வாக கருதப்படுகிறது. அதாவது காங்கிரஸ், பாஜக, தேமுதிக மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றில், எந்தெந்த கட்சிகள் திமுகவுடன் கூட்டணி சேரும், எந்தெந்த கட்சிகள் வேறு அணிக்கு மாறும் என்பதை அறிய திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பாக ஏற்காடு தேர்தல் அமைந்துள்ளது.

ஏற்காடு தேர்தலில் ஆதரவு தருமாறு காங்கிரஸ், தேமுதிக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதினார். இதற்கு புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்தன. மற்ற பெரிய கட்சிகள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. எனவே இந்த கட்சிகள் திமுகவுடன் கூட்டணி என்பதை இரண்டாம் வாய்ப்பாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஏற்காடு தேர்தல் முடிவைப் பொறுத்து கூட்டணியை முடிவு செய்யும் பணிகளைத் தீவிரப்படுத்த திமுக திட்டமிட்டுள்ளது.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத திமுக நிர்வாகிகள் கூறியதாவது: வரும் நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி கொண்ட வலுவான அணியை அமைக்க திமுக திட்டமிட்டுள்ளது.

தேமுதிக முன்வராத பட்சத்தில் இரண்டு முஸ்லிம் கட்சிகள், புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், பாமக உள்ளிட்ட கட்சிகளை இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியும் தேமுதிகவும் திமுக கூட்டணிக்கு வராவிட்டால், இரண்டு முஸ்லிம் கட்சிகள், புதிய தமிழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் மாற்று அணியை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜகவோ காங்கிரசோ இல்லா மல், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் மட்டும் அதிமுக கூட்டணி அமைத்தால், திமுகவும் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மாற்று அணி அமைக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, கட்சியின் பொதுக் குழுவில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x