Published : 30 Nov 2014 02:31 PM
Last Updated : 30 Nov 2014 02:31 PM

தட்பவெட்ப நிலை மாற்றம்: எம்.எஸ்.சுவாமிநாதன் நிறுவனத்துக்கு மத்திய அமைச்சர் வேண்டுகோள்

தட்பவெட்ப நிலை மாற்றத்தின் தாக்கம், கிரீன்ஹவுஸ் வாயுக்களின் வெளிப்பாடு ஆகியவை குறித்த உண்மையான நிலை குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெரு நாட்டின் லிமா நகரத்தில் டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தட்பவெட்ப நிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இதில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 6-ம் தேதி கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் பல்வேறு நிகழ்ச் சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நேற்று காலை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனை அவரது ஆராய்ச்சி நிறுவனத்தில் சந்தித்தார். அப்போது விவசாயத்தின் மீது தட்பவெட்ப நிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் வெளியிடப்படும் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் அளவு குறித்து அறிக்கை அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து பத்திரிகை யாளர்களிடம் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது: உணவு பாதுகாப்பைப் பொறுத்தவரை கிழக்கு இந்தியாவில் அதிக கவனம் செலுத்தவுள்ளோம். விவசாயிகளுக்கு உற்பத்தி செலவில் 50சதவீதம் லாபமாக கிடைக்க வேண்டும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியிருப்பது சரியான பரிந்துரையாகும். இது குறித்து மேலும் ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் செயல் இயக்குநர் அஜய் கே. பரிடா கூறும்போது, “கிரீன்ஹவுஸ் வாயு வெளிப்பாடு குறித்து வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் எப்போதும் இரு வேறு கருத்து கள் உண்டு. வளரும் நாடுகள் அதிகமாக வாயுக்களை வெளியிடு கின்றன என்று வளர்ந்த நாடுகள் கூறி வருகின்றன. எனவே, இதுகுறித்த உண்மையான தகவல்களை அளிக்குமாறு அமைச்சர் கேட்டுள்ளார்”என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x