

சென்னை அஞ்சல் மண்டல தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அஞ்சலக சேமிப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவில் 31 கோடி சேமிப்பு கணக்குகள் உள்ளன. இவற்றின் மதிப்பு 6 லட்சம் கோடி யாகும். இந்த திட்டத்தை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கையாள சிபிஎஸ் (Core Banking Solution) என்னும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் அஞ்சலக சேமிப்பில் ஈடுபட்டுவரும் ஒருவர் பணத்தை இணையத்திலேயே பரிமாற்றம் செய்யவும், அஞ்சலக ஏடிஎம் மூலம் பணம் பெறுவதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்ப திட்டம் நாட்டி லேயே முதன் முறையாக கிரீம்ஸ் சாலை அஞ்சலகத்தில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வசதியை பெறுகிற 1000-வது அஞ்சல் நிலையம் என்ற பெருமையை சென்னை பொது தபால் நிலையம் பெறவுள்ளது. 228 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த அஞ்சலகத்தில் சிபிஎஸ் நவீன தொழில்நுட்பம் வரும் டிசம்பர் 1-ம் தேதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதை முன்னிட்டு முக்கிய தபால் நிலையங்களில் சிறப்பு முத்திரை பதிக்கப்பட்ட உறைகள் விற்கப்படுகின்றன.