

பள்ளிகளில் ஜாதிய மோதல்களைத் தடுக்க காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழுப்புரம் சரக டிஐஜி தலைமையில் கடலூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கடலூர் நகராட்சிப் பள்ளியில் கடந்த 27ம் தேதி இரண்டு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வெளி ஆட்கள் தலையிட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். ஏற்கெனவே மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் இதுபோன்ற பிரச்சினைகள் எழுந்துள்ளன, மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுத்திடும் முயற்சியில் மாவட்ட காவல்துறை ஈடுபட்டுள்ளது.
இதையடுத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்விக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஆகியோர் அடங்கிய கலந்தாய்வுக் கூட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு விழுப்புரம் டிஐஜி அனிஷாஉசேன் தலைமை தாங்கினார். எஸ்பி விஜயகுமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி ஆகியோருடன் முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், பள்ளியில் மாணவர்களிடையே மோதல் ஏற்படுவதை முன்னரே கண்டறிந்து அதனைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டன.
மேலும், மாணவர்களின் பிரச்சினையில் வெளி ஆட்கள் தலையிடுவதை தடுத்திட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நீதிபோதனை வகுப்புகள், மாணவர்களுக்கு சிறப்பு வல்லுநர்களைக் கொண்டு மனவளப் பயிற்சி அளிப்பதும் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மாவட்ட கல்வி அலுவலர்கள் குமாரசாமி, மதிவாணன், கோமதி, டிஎஸ்பிகள் நரசிம்மன், சாகுல்அமீது, கணேசன், வெங்கடேசன் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
இதைப் போலவே கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஹேமலதா உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.