பவானி ஆற்றின் குறுக்கே கேரளா புதிய தடுப்பணை கட்டுவதை கண்டித்து கோவையில் 20-ம் தேதி மதிமுக ஆர்ப்பாட்டம்

பவானி ஆற்றின் குறுக்கே கேரளா புதிய தடுப்பணை கட்டுவதை கண்டித்து கோவையில் 20-ம் தேதி மதிமுக ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

பவானி ஆற்றின் குறுக்கே கேரளா புதிய தடுப்பணை கட்டுவதை கண்டித்து கோவையில் வருகிற 20-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை என்ற இடத்திலும் மஞ்சக்கண்டி என்ற இடத்திலும் தடுப்பு அணை கட்டும் பணிகளைக் கேரள அரசு தொடங்கியுள்ளது. மேலும் பாடவயல், சீரக்கடவு, சாவடியூர், சாலையூர் ஆகிய இடங்களிலும் தடுப்பு அணை கட்டப் போவதாகத் தகவல் வந்துள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு பவானி ஆற்றின் குறுக்கே முக்காலி என்ற இடத்தில் தடுப்பு அணை கட்டித் தண்ணீரைத் திருப்பும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டது. தமிழக மக்களின் போராட்டத்தாலும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காததாலும் அந்தத் திட்டத்தைக் கேரள அரசு கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதன்பிறகு, 'அட்டப்பாடி பள்ளத்தாக்கு நீர்ப்பாசனத் திட்டம்' என்ற பெயரில் சிறுவாணி நதியின் குறுக்கே பெரிய அணையைக் கட்டி அதன் மூலம் ஆண்டுக்கு 4.5 டிஎம்சி தண்ணீர் எடுக்கும் திட்டத்தை 2012 ஆம் ஆண்டு கேரள அரசு தொடங்கியது.

கடந்த ஆண்டு அந்தத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் ஆய்விற்கான அனுமதியையும் மத்திய அரசிடம் இருந்து கேரள அரசு பெற்று விட்டது. பின்பு தமிழகத்தின் கடும் எதிர்ப்பின் காரணமாகவும், மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியைத் திரும்பப் பெற்றதன் விளைவாகவும், அந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில், தற்போது பவானி ஆற்றின் குறுக்கே பல தடுப்பு அணைகளைக் கட்டித் தண்ணீர் எடுக்கும் திட்டத்தைக் கேரள அரசு தொடங்கியுள்ளது. அதற்கான அணை கட்டும் பணிகளைத் தொடங்கி விட்டனர்.

எனவே, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு கேரள அரசு இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும். தமிழகத்தின் இசைவு இல்லாமல், பவானி ஆற்றின் குறுக்கே எந்த ஒரு தடுப்பு அணையையும் கட்டக் கூடாது.

கேரள அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், இதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், ஜனவரி 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் மதிமுகவினரும், விவசாயிகளும் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்'' என்று வைகோ கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in