Published : 05 Feb 2017 10:18 AM
Last Updated : 05 Feb 2017 10:18 AM

எண்ணெய் படலத்தால் மீன்குஞ்சுகள் இறக்க நேரிடும்: எம்.எஸ்.சுவாமிநாதன் மையம் கருத்து

கடலில் எண்ணெய் படலம் உள்ள பகுதியில் மீன்குஞ்சுகள், லார்வாக்கள் இறக்க நேரிடும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் (எம்எஸ்எஸ்ஆர்எஃப்) செயல் இயக்குநர் வி.செல்வம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

கடலில் தனக்கு தேவையான ஆக்சிஜன் தடைபடுகிறது என்று தெரிந்தாலே மீன்கள் வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்துவிடும். எண்ணெய் படலம் பரவியுள்ள தொலைவு குறித்து மிகச் சரியான தகவல் இல்லை என்றாலும், செயற்கைக்கோள் படங்களை பார்க்கும்போது மிகப்பெரிய அளவில் எண்ணெய் படலம் கடலில் இல்லை. மேலும், மீன்கள் வாசனையை கண்டறியும் திறன் கொண்டவை. ஒரு இடத்தில் கெட்ட வாடை வரும்போது, அந்த இடத்திலிருந்து மீன்கள் விலகி சென்றுவிடும். எனவே, பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மீன்கள் நிச்சயம் இடம்பெயர்ந்திருக்கும். அதனால் பெரிய மீன்கள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை.

மீன் குஞ்சுகள், லார்வாக்கள் தண்ணீரின் மேற்பரப்பில் உள்ள ‘பைட்டோபிளாங்டான்’ எனப்படும் மிதவை உயிரிகளை உண்டு உயிர்வாழ்பவை. எனவே, எண்ணெய் படலம் உள்ள பகுதியில் மீன்குஞ்சுகள், லார்வாக்கள் இறக்க நேரிடும். இதனால், சிறிது காலம் மீன்வளம் குறையலாம்.

மீன்வளத்தை பொருத்தவரை உடனடியாக எண்ணெய் படலத்தின் பாதிப்பு தெரியாது. 6 முதல் ஒரு ஆண்டுக்குப் பிறகு பெரிய மீன்கள் கடற்கரையோரம் கிடைக்கும் அளவு குறையலாம். எவ்வளவு பாதிப்பு இருக்கும் என்பதை அறிய மத்தியக் கடல்மீன்வள ஆராய்ச்சி நிலை யம் (Central Marine Fisheries Research Institute - CMFRI) மாதிரிகளை சேகரித்து பரிசோதிக்க வேண்டும். இதன்மூலம் எதிர்காலத்தில் எவ்வளவு மீன் உற்பத்தி பாதிக்கப்படும் என்பதை அறிய முடியும்.

எண்ணெய் படலம் பரவியுள்ள இடத்தில் மீன்கள் கிடைக்காது என்பதால் ஆழ் கடல் மீன்களை உண்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால், இறால், நண்டு போன்றவை கடற்கரையோரம் குறைந்த ஆழத்தில் கிடைக்கக்கூடியவை. எனவே, எண்ணெய் படலத்தால் அவை பாதிக்கப்பட்டிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x