Published : 04 Nov 2013 11:14 PM
Last Updated : 04 Nov 2013 11:14 PM

பிரதமர் இலங்கைச் செல்ல ஜெயந்தி நடராஜன், நாராயணசாமி எதிர்ப்பு; சுதர்சன நாச்சியப்பன் ஆதரவு

இலங்கையில் இம்மாதம் 15 முதல் 17-ம் தேதி வரை நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதற்கு, மத்திய அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், நாராயணசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், பிரதமர் மன்மோகன் சிங் தேச நலனைக் கருத்தில்கொண்டு, முடிவெடுக்க வேண்டும் என்று இலங்கைப் பயணத்துக்கு மத்திய வர்த்தக இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தேசம், மாநிலம் மற்றும் அண்டை நாட்டுடனான உறவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு பிரதமர் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களையும் மனத்தில்கொண்டு, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் வகையில் பிரதமரின் முடிவு இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாராயணசாமி, ஜெயந்தி நடராஜன் எதிர்ப்பு

இதனிடையே, மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோரைத் தொடர்ந்து, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதற்கு மத்திய அமைச்சர் நாராயணசாமியும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இது தொடர்பாக, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்லக் கூடாது என்று அவரிடமே எனது கருத்தைத் தெரிவித்துவிட்டேன்" என்றார்.

மேலும், "இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று பிரதமரைச் சந்தித்து சில அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிலர் இன்னும் சந்திக்கவில்லை. அவர் கலந்துகொள்ளக் கூடாது என்பதுதான் பெரும்பாலானவர்களின் கருததாக இருக்கிறது" என்றார் பிரதமர் அலுவலகத்துகான இணையமைச்சர் நாராயணசாமி.

முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன், "காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வது பற்றி நல்ல முடிவு எடுப்பார். அவர் கலந்துகொள்ளக் கூடாது என்று தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். அதைக் கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளேன். தமிழ் மக்களின் உணர்வுகளை அறிந்து பிரதமர் நல்ல முடிவு எடுப்பார்.

அத்துடன், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து வலியுறுத்தவுள்ளேன்" என்றார்.

ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் நிலைப்பாடு

காங்கிரஸ் அமைச்சர்களில் முதலில் தனது எதிர்ப்பை பகிரங்கமாகப் பதிவு செய்த மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று பிரதமரிடமே நேரில் வலியுறுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு பிரதமர் முடிவெடுப்பார் என்று என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறிவருவதும் கவனத்துக்குரியது.

மத்திய அமைச்சர்களின் இந்த எதிர்ப்பால், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாடு தொடர்பாக முடிவெடுப்பதில், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடும் நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x