

“ஏற்காடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் தேர்தல் விதிமுறை மீறல்களை கண்டுகொள்ளாமல், ஆளுங்கட்சிக்குச் சாதகமாக செயல்பட்டுவரும் ஆட்சியரை மாற்ற வேண்டும். இல்லையெனில் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தி.மு.க. தேர்தல் பணிக்குழு உறுப்பினரும், எம்.பி.யுமான செல்வகணபதி கூறினார். இதுகுறித்து சேலத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது;
அமைச்சர் காரில் வேட்பாளர்
ஏற்காடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தேர்தல் விதிமுறைகளை மீறியும், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டு வருகிறது. அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா வேட்புமனுத் தாக்கல் செய்ய, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமியுடன், ஆட்சியர் அலுவலகத்துக்குள் காரில் வந்தார். இவர்கள் வந்த காரில் அ.தி.மு.க. கட்சி கொடி கட்டப்பட்டு இருந்தது. மேலும் காருக்குப் பின்னால் மத்திய பாதுகாப்பு படையினர் ஆயுதம் ஏந்தியபடி அரசு ஜீப்பில் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
மேலும் அமைச்சர்கள், வாரியத் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் 50க்கும் மேற்பட்ட காரில் அணிவகுத்து வந்துள்ளனர். இதற்கான புகைப்பட ஆதாரம் எங்களிடம் உள்ளது. அயோத்தியாப்பட்டணத்தில் அ.தி.மு.க. தலைமை தேர்தல் பணிமனை திறப்பு விழாவில், 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து வந்துள்ளன.
ஏற்காடு இடைத்தேர்தலை முன்னிட்டு 33 இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் மகரபூஷணம் வெற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏனெனில், அமைச்சர்கள் காரில் அணிவகுத்து வரும்போது, சோதனைச் சாவடியில் இருந்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கார்களையும் சோதனை செய்யவில்லை. ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் ஆட்சியரை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம்.
அதிகாரிகள் தேர்தல் விதிமுறையைக் காற்றில் பறக்கவிடும் நிலையில், ஏற்காடு இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. குறுகிய காலத்தில் பணி ஓய்வுபெறக் கூடிய நிலையில் உள்ள ஆட்சியர், வெளிப்படையாக ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எனவே, பாரபட்சமில்லாமல் நடுநிலையுடன் உள்ள அதிகாரியைக் கொண்டு ஏற்காடு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும். சேலம் ஆட்சியர் மகரபூஷணத்தை மாநில தேர்தல் ஆணையம் மாற்றவில்லை என்றால் தி.மு.க. மேலிடத்தின் அனுமதியுடன் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.