13 ஆண்டுகள் பணியாற்றியும் ரூ.500 தான் ஊதிய உயர்வா?- டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் அதிருப்தி

13 ஆண்டுகள் பணியாற்றியும் ரூ.500 தான் ஊதிய உயர்வா?- டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் அதிருப்தி
Updated on
1 min read

டாஸ்மாக் மதுக்கடைகளில் 13 ஆண்டுகளில் பணியாற்றியவர்களுகு ரூ.500 ஊதிய உயர்வு வழங்குவது ஏற்புடையதல்ல என்று டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளம் கூறியுள்ளது.

இது தொடர்பாக அந்த சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் வெளியிட்ட அறிக்கையில், ''டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதியத்தை ரூ.500, ரூ.400, ரூ300 வீதம் உயர்த்துவதாக சட்டப்பேரவையில் தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் பணியாளர்களுக்கு திமுக ஆட்சி காலத்தில் 3 முறையும், அதிமுக ஆட்சி காலத்தில் 5 முறையும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ள போதிலும், ஊழியர்கள் பெறுகிற சம்பளம் வெறும் ரூ.7 ஆயிரம் தான்.

13 ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களை பணி வரன்முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அரசு அதனை கவனத்தில் கொள்ளாமல் பெயரளவிற்கு ஊதிய உயர்வை அளித்திருப்பது எந்த வகையிலும் ஏற்புடையதாக இல்லை.

மேலும், தமிழகத்தில் மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு உரிய பணி வழங்குவது குறித்து உரிய திட்டமிடுதல் இல்லை. இதனால் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர் பணி கிடைக்காமல் உள்ளனர். டாஸ்மாக் நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்ட நிரந்தர காலி பணியிடங்கள் உள்ளது.

ஆனால், மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய ஊழியர்களை அங்கே பணியர்த்தாமல், டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதல் ஊழியர்களாகவும், பறக்கும்படை, ரிசர்வ் மற்றும் சர்பிளஸ் என்ற பெயரில் பணி வழங்காமல் காத்திருப்போர் நிலையிலும் வைக்கப்பட்டுள்ளனர். டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க ஊழியர்களை பணிவரன்முறை செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று திருச்செல்வன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in